உலகளாவிய போட்டியை உள்ளூர் மக்கள் தவிர்த்துக்கொள்ள இயலாது

உலகளாவிய போட்டியை உள்ளூர் மக்கள் தவிர்த்துக்கொள்ள இயலாது

2 mins read
Google News Preferred Icon

தொலைதூர வேலை ஏற்பாடு அதிகமாகும் சூழலில் துணைப் பிரதமர் விளக்கம்

உலகளாவிய போட்டி அதிகமாகி வருகிறது. கொவிட்-19 காரணமாக தொலைவில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறை கூடி வருவதால், அந்தப் போட்டி யில் இருந்து சிங்கப்பூரர்களை அரண் அமைத்து பாதுகாப்பது நடைமுறை சாத்தியமானதல்ல என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

ஆசியாவில் மட்டும் வரும் ஆண்டுகளில் மில்லியன் கணக்கான பல்கலைக்கழக பட்டதாரிகள் உலகளவில் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்வார்கள். அதேவேளையில், தொழில்நுட்ப மாற்றங்களும் இடம்பெறும். தொழில்துறை உருமாற்றம் காரணமாக வேலை பாணிகளும் மாறும் என்று அவர் விளக்கினார்.

இத்தகைய சூழலில் அனைத்துலகப் போட்டிகளில் இருந்து சிங்கப்பூர் ஊழியர்களைப் பாதுகாப்பது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை என்றார் அவர்.

"தொலைவில் இருந்து வேலை பார்க்கும் ஏற்பாடு காரணமாக முதலாளிகள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் அதிக தேர்ச்சிமிக்க ஊழியர்களை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

"அதாவது, நம்முடன் போட்டியிட வெளிநாட்டினர் சிங்கப்பூரில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இராது. பூகோள ரீதியில் வாய்ப்புகளை ஒடுக்குவது மிகவும் சிரமமாகிவிடும்," என்றாரவர்.

சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கு உருகொடுப்பது பற்றிய கருத்தரங்கு ஒன்றில் திரு ஹெங்கின் உரை ஒளிபரப்பப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 115வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அந்தக் கருத்தரங்குத் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பிறகு திரு ஹெங், அந்தப் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்களுடன் மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

உலகளவிலான வேலை சந்தைக்குத் தயாராக மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த துணைப் பிரதமர், அது நம்பிக்கை, தன்னடக்கம், திறந்தநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய மனப்போக்கை கொண்டிருப்பதைப் பொறுத்து இருக்கும் என்றார்.

நம்பிக்கை முக்கியம். அதோடு மற்றவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க ஏதுவாக தன்னடக்கமும் அவசியம் என்று குறிப்பிட்ட திரு ஹெங், நமது வழிதான் தலைசிறந்த வழி என்று எப்போதுமே நாம் கருதக் கூடாது என்றார்.

சிங்கப்பூரின் முதல் தலைமுறை தலைவர்கள் புத்தாக்கத்துடன் நாட்டின் சொந்த வழியை பேணி உருவாக்கியதை முன்ன தாக திரு ஹெங் சுட்டிக்காட்டினார்.

"உலகிற்குத் தன் கதவுகளை சிங்கப்பூர் திறந்து வைத்து இருக்கிறது. இதுவே அதன் பொதுவான இயல்பாக இருந்து வந்துள்ளது. "தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு தனித்து இருந்திருந்தால் சிங்கப்பூர் வெற்றி பெற்றிருக்க முடியாது," என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.