ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் அந்த நாட்டின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான கண்டகாரையும் கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறிவிட்ட நிலையில், தலிபான் போராளிகள் பெரிய அளவில் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
அமெரிக்க ஆதரவுடன் கூடிய ஆப்கான் அரசாங்கத்திற்கு இது பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. கண்டகார் மட்டுமின்றி மேற்குப்புறம் உள்ள மூன்றாவது ஆகப் பெரிய நகரான ஹீரட்டையும் தெற்கே இருக்கும் லஷ்கார் கா என்ற நகரையும் வடமேற்கே இருக்கும் குலா-இ-நாவ் என்ற நகரையும் கைப்பற்றிவிட்டதாக தலிபான் தரப்பினர் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதுமே தொலைபேசித் தொடர்புகள் ஏறக்குறைய முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகையால் இவற்றில் எந்த நகர் இன்னமும் அரசு வசம் இருக்கிறது என்பதை உறுதிப் படுத்த முடியவில்லை என்று ராய்ட் டர்ஸ் தெரிவித்துள்ளது.
கண்டகார் நகரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும் என்றாலும் கண்டகார் விமானநிலையம் இன்னமும் அரசு வசம் இருப்பதாக வும் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் கூறியது.
ஆப்கான் நகர்களில் இருந்து தங்கள் மக்களையும் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்ற உடனடியாக துருப்புகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்கா, பிரிட்டன் முதலான நாடுகள் அறிவித்துள்ளன.

