கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுக்கள் உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலி தடுப்பூசி சான்றிதழ்களைக் காட்டி உணவகத்தில் உணவருந்த முயற்சி செய்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்து அவர்களை அங்கிருந்து போகச் சொல்லும் நிலை சில உணவகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கிலினி சாலையில் உள்ள '87 ஜஸ்ட் தாய்' எனும் தாய்லாந்து உணவுவகைகளை விற்கும் உணவகம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பத்து வாடிக்கையாளர்களைத் திரும்பிப் போகச் சொன்னது.
குளிர்சாதன வசதி இல்லாத அந்த உணவகத்தைப் பலர் காப்பிக்கடை என்று கருதி ஜோடிகளாக வந்ததாக உணவகத்தின் இணை நிறுவனர் எரிக் டான் தெரிவித்தார்.
உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் அதிகபட்சம் இருவர் கொண்ட குழுக்களில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம்.
குளிர்சாதன வசதி இல்லாததால் உணவகமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதை காப்பிக்கடையாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறி வாடிக்கையாளர்கள் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
டிரேஸ்டுகெதர் செயலி, ஹெல்த் ஹப், தடுப்பூசி அட்டைகள், டிரேஸ்டுகெதர் செயலி ஆகியவை மூலம் ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவரா என்பதை உணவகங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இதுபற்றி சில வாடிக்கையாளர்களுக்குத் தெரியவில்லை என்றும் அனுமதி மறுக்கப்படும்போது அவர்கள் கோபமடைவதாகவும் உணவகங்கள் தெரிவித்தன.

