ஹைட்டியில் கடும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

1 mins read
993b3607-9240-4f7e-b394-644168b55414
நிலநடுக்கத்தால் கட்டடங்களுக்கு மோசமான சேதம் ஏற்பட்டது. படம்: பேட்ரிக் கஸ்பார்ட்/டுவிட்டர் -

கரீபியன் நாடான ஹைட்டியில் இன்று (ஆகஸ்ட் 14) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள பல பகுதிகளில் கட்டடங்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.2 என நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் கூறியது. தலைநகர் போர்ட் அவ் பிரின்சிலிருந்து 150 கிலோ மீட்டர் மேற்கே உள்ள நகராட்சி அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கும் மையம் கொண்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹைட்டி கரையோரப் பகுதிகளில் மூன்று மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம் கூறியது.

ஹைட்டியில் 2010ல் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுத்திய மோசமான பாதிப்பிலிருந்து அந்நாடு இன்னமும் மீண்டு வரும் வேளையில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2010 நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பறித்தது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் மக்கள் வசிப்பதற்கு வீடின்றி தவித்தனர்.

இன்றைய நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் அங்கு வசிக்கும் மக்கள் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதம் ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்