வேலை தேடுவோரின் கல்வித் தகுதி, முந்தைய பணி நியமனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேலை வழங்காமல் அவர்களிடம் உள்ள திறன்களின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திறன்களின் அடிப்படையில் வேலைக்கு ஆள்சேர்க்க நிறுவ னங்களை அந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.
தொடர்புகளை ஏற்படுத்தும் லிங்க்டின் (LinkedIn) நிறுவனம் நேற்று தொடங்கிய திறன் பாதைத் திட்டத்தில் தற்போதைக்கு எட்டு உள்ளூர் நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. தேசிய வேலைகள் மன்றம் அதற்கு ஆதரவளித்துள்ளது.
ஊழியர்களின் தற்போதைய திறன்களின் அடிப்படையில் அவர்களை வேலைக்கு அமர்த்திவிட்டு, பயிற்சி வகுப்புகள் அல்லது வேலைப் பயிற்சி அளித்து அவர் களின் மேம்பாட்டில் முதலீடு செய்வது இன்றைய சூழலில் இன்னும் பொருத்தமானது என்று, திறன் பாதைத் திட்டத்தைப் பற்றி நேற்று முன்தினம் அறிவித்த லிங்க்டின் நிறுவனம் கூறியது.
வேலை தேடுவோர் தங்கள் திறன்களை எடுத்துரைப்பதிலும் பல்வகை அனுபவங்கள் கொண்ட திறனாளர்களை வேலைக்குச் சேர்ப்பதிலும் நிறுவனங்களுக்கு உதவும் லிங்க்டின் நிறுவனத்தின் சேவைகள் இத்திட்டத்தில் பயன் படுத்திக்கொள்ளப்படும்.
தற்போது வாடிக்கையாளர் சேவை அதிகாரி, வேலைக்கு ஆள்சேர்க்கும் அதிகாரிகள், தரவுப் பகுப்பாய்வாளர்கள், விநியோகத் தொடர் ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட நிர்வாகிகள், விற்பனை மேம்பாட்டு நிபுணர்கள் ஆகிய ஆறுவகை வேலைகள் புதிய திறன் பாதைத் திட்டத்தில் வழங்கப்படும்.
திட்டத்தின்கீழ் வேலைகளை வழங்க, கெப்பிட்டலேண்ட், கெரோ சல், ஃபுட்பாண்டா, லஸாடா, என்டியுசி எண்டர்பிரைஸ், ஒசிபிசி வங்கி, ஸூலின் ஃபார்மா, ஸலோரா ஆகிய எட்டு நிறுவனங்கள் இதில் சேர்ந்துள்ளன.
இன்னும் அதிகமான நிறுவனங்கள் திட்டத்தில் சேரவேண்டும் என்று லிங்க்டின் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு நிர்வாக இயக்குநர் ஃபியோன் ஆங் கேட்டுக் கொண்டார்.
திட்டத்தின் கீழ், அடுத்த மாதத்திலிருந்து வேலை தேடுவோருக்கு தங்கள் திறன்களின் அடிப்படையில் லிங்க்டின் தளத்தில் பொருத்தமான வேலைவாய்ப்புகள் பரிந்துரைக்கப்படும்.
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க எண்ணுவோர் அவற்றுக்குத் தேவையான திறன்களை லிங்க்டின் தளத்தில் வழங்கப்படும் இலவசப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். பின்னர் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் தங்கள் திறன்களைக் காட்டும் காணொளிகள் அல்லது அறிமுகக் கடிதத்தை வழங்கலாம். நிறுவனங்கள் அவர்களை இரண்டு வாரங்களில் தொடர்புகொள்ளும்.
ஊழியர்களின் வேலையில் சேரும் திறன்களை மேம்படுத்த லிங்க்டின் நிறுவனம் மெய்நிகர் பட்டறைகளை நடத்தும்.
புதிய திட்டம் பணியின் வருங்காலத்தை மாற்றியமைக்க உதவும் என்று அதில் சேர்ந்துள்ள நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழலில் திறன்களே முக்கியத்துவம் பெறும் என்று ஸலோரா நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி லூயீஸ் பெண்டர் கூறினார். அவர்களின் முந்தைய வேலைகளைவிட தற்போதைய திறன்களும் வருங்காலத்தில் மேம்படும் சாத்தியம் முக்கியமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

