மலேசியாவில் கிருமித்தொற்று: இதுவரை 12,228 பேர் மரணம்

1 mins read

மலே­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை நேற்று 12,228 ஆனது. அங்கு நேற்று மேலும் 260 பேர் மாண்­ட­தாக அந்­நாட்டு சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று விடுத்த அறிக்­கை­யில் கூறி­னார்.

அத்­து­டன், மருத்­து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்சைப் பிரி­வில் 1,096 பேர் இருப்­ப­தா­க­வும் டாக்­டர் நூர் ஹிஷாம் தெரி­வித்­தார். மலே­சி­யா­வில் கிரு­மித் தொற்­றால் ஆக அதி­க­மாக கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி 1,097 பேர் தீவிர கண்­கா­ணிப்­பில் இருந்­த­னர்.

மேலும், அந்­நாட்­டில் தொடர்ந்து நான்­கா­வது நாளாக புதி­தாக தொற்று ஏற்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 20,000க்கு மேல் சென்­றுள்­ளது. நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் 20,670 பேருக்­குக் கிரு­மித் தொற்று ஏற்­பட்­ட­தாக நேற்­றைய அறிக்­கை­ கூறியது.

அவர்­களில் 80 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி ஏதும் போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள் அல்­லது முழு­மை­யா­கப் போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள் என்று டாக்­டர் நூர் ஹிஷாம் குறிப்­பிட்­டார். தொடர்ந்து சிலாங்­கூ­ரில் தான் ஆகி அதி­க­மான தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் விகி­தம் கூடி­யுள்ள மாநி­லங்­களில் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்­சை­ அல்லது தீவிர கவ­னிப்­பு தேவைப்­ப­டுபவர்களின் எண்­ணிக்கை குறைந்­துள்­ள­தா­க­வும் கோலா­லம்­பூர், லாபு­வான், சர­வாக், புத்­ர­ரா­ஜெயா, நெகிரி செம்­பி­லான் போன்­ற­வற்­றில் அப்­போக்கு காணப்­பட்­ட­தா­க­வும் டாக்­டர் நூர் ஹிஷாம் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.