தலிபான் படைகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நெருங்கிவரும் வேளையில் நாட்டில் கூடுதல் அழிவைத் தடுப்பதற்காக உள்நாட்டு, வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருவதாக ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி கூறியுள்ளார்.
ஆப்கன் படை திரட்டப்படும் என்று கூறிய அவர், மேல்விவரம் அளிக்கவில்லை. தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் அதனைத் தெரிவித்தார். திரு அஷ்ரஃப் பதவி விலக வேண்டும் என்று தலிபான் வற்புறுத்தியிருந்தது. ஆனால் ஆப்கான் அதிபர் அது பற்றி நேற்றைய உரையில் ஏதும் குறிப்பிடவில்லை.
பெரும்பான்மையான நேட்டோ துருப்புகள் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட்டன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அவற்றின் தூதரக ஊழியர்களை வெளியேற்றத் தயாராகி வருகின்றன. இன்று மாலைக்குள் சுமார் 3,000 அமெரிக்கத் துருப்பினர் காபூலைச் சென்றடைவர் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு பேச்சாளர் ஜான் கெர்பி நேற்று கூறினார்.
அதே வேளையில் காபூலைத் தற்காக்க அமெரிக்காவும் வேறு சில மேற்கத்திய நாடுகளும் அவற்றின் படைகளை அனுப்பப் போவதாகக் கூறியுள்ளன. அமெரிக்கா குவைத்தில் நிறுத்தப்பட்டுள்ள அதன் தரைப்படையினரை அனுப்பும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் தலிபான் படையினர் காபூலுக்கு சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புல்-இ-அலாம் எனும் நகரத்தை நேற்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். லோகர் மாநிலத்தின் தலைநகரமான அந்நகருக்குள் நுழைந்த தலிபான் படையினரை ஆப்கானிஸ்தான் படைகள் பெரிதும் எதிர்க்கவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் ஏஎப்பி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானின் கண்டகார், ஹீரத் நகரங்களை நேற்று முன்தினம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. நாட்டின் மாநிலத் தலைநகரங்களில் கிட்டத்தட்ட பாதி அவர்கள் வசம் உள்ளது.
இவ்வாண்டு மட்டும் அங்கு சுமார் 400,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெறியேறியுள்ளதாக ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பு கூறியது.
அவர்களில் கிட்டத்தட்ட 120,000 பேர் காபூலில் தஞ்சம் புகுந்துள்ளனர். பல்லாயிரம் அகதிகளை ஏற்றுக்கொள்ளும்படி அமெரிக்கா உலகநாடுகளைக் கேட்டுவருகிறது. கனடா 20,000 அகதிகளை ஏற்க முன்வந்துள்ளது.

