கொவிட்-19 கிருமித்தொற்றால் சில சவால்கள் ஏற்பட்டிருந்தபோதும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே பரஸ்பர ஆதரவின் மூலமாக அணுக்கமான உறவை வளர்த்திருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப், இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கான தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய தமது கடிதத்தில், அவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவின் அணுக்கத்தைத் திருமதி ஹலிமா சுட்டினார். பொருளியல், சுகாதாரம், இரு நாட்டு மக்களுக்கு இடையிலுள்ள அணுக்கமான உறவுகள் போன்ற வலுவான அடிப்படைக் கூறுகள் இந்த உறவுக்கு அடித்தளமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
"இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூர் தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளது," என்று திருமதி ஹலிமா தெரிவித்தார். ஆண்டுக்கு இந்தியாவுக்கு அளிக்கப்படும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் ஆக அதிகமாக சிங்கப்பூர் தொடர்ந்து உள்ளதையும் அவர் சுட்டினார்.
நிதித்தொழில்நுட்பம், மின்னிலக்கமயமாதல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நம் நாடுகள் இரண்டுமே தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றனர்," என்றார் அவர்.
இம்மாதம் பிற்பகுதி நடக்கவுள்ள ஆசியான்-இந்தியா உறவுகள் கலந்துரையாடலில் சிங்கப்பூர் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றும். இதில் சிங்கப்பூர், "ஆசியான்-இந்திய உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு இந்தியாவுடன் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறது," என்று அவர் கூறினார்.
"இருநாட்டு ஒத்துழைப்பு மிகவும் அகலமாக இருக்கையில், கிருமிப்பரவலிலிருந்து மீண்டும் இவ்வேளையில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறும் என நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

