புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும்வரை முகைதீன் பிரதமராகத் தொடர்வார்
மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து திரு முகைதீன் யாசின் நேற்று விலகினார். அவரது பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக்கொண்டார்.
ஆயினும், புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை திரு முகைதீன் இடைக்காலப் பிரதமராகக் கடமை ஆற்றுவார்.
நாட்டு மக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருதி, இப்போதைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவது சிறப்பான தெரிவாக இராது என்று மாமன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று முற்பகலில் அரண்மனைக்குச் சென்று, மாமன்னரைச் சந்தித்த திரு முகைதீன், அவரிடம் தமது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
அதன்பின் பிற்பகலில் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய திரு முகைதீன், "நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம், புதிய அரசாங்கம் விரைவில் நியமிக்கப்படும் என்று நம்புகிறேன். பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். அனைவர்க்கும் தடுப்பூசி போடும் வகையில், போதுமான அளவிற்கும் மேல் தடுப்பூசிகளை வாங்க எனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசித் திட்டம் செவ்வனே நடந்தால், அக்டோபர் மாத இறுதிக்குள் எல்லார்க்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும்," என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டதை ஒத்துக்கொண்ட அவர், "நாட்டு வளங்களைச் சுரண்டியவர்களுடன் இணைந்து நான் சதி செய்யப்போவதோ அல்லது நீதித்துறையில் குறுக்கிடவோ அல்லது பதவியில் நீடிப்பதற்காக அரசியலமைப்பிற்கு விரோதமாகச் செயல்படப்போவதோ இல்லை," என்றார்.
கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மலேசியா விரைவில் மீளும் என்றும் திரு முகைதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்றுக் காலை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மலேசிய அமைச்சரவை மாமன்னரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்து விட்டதாக அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தம்முடைய இன்ஸ்டகிராம் பக்கம் வழியாகத் தெரிவித்தார்.
இம்மாதம் 3ஆம் தேதி அம்னோ எம்.பி.க்கள் 11 பேர், திரு முகைதீன் தலைமையிலான அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள திரு முகைதீன் கடந்த இரு வாரங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனாலும், அவை தோல்வி அடைந்ததால் அவர் தலைமையிலான 18 மாத கால ஆட்சி நேற்றுடன் முடிவிற்கு வந்தது.
இதனையடுத்து, அடுத்த பிரதமராக நியமிக்கப்படலாம் என்று ஒருசிலரது பெயர்கள் அடிபடும் நிலையில், மொத்தம் 222 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளவர் யார் என்பதை மாமன்னர் முடிவுசெய்வார்.
இப்போதைக்கு இரு எம்.பி. இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், மற்ற 220 பேரில் 100 பேர் திரு முகைதீன் தலைமையிலான பெரிக்கத்தான் முன்னணிக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் 88 பேர் உள்ளனர்.
அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கு ஆதரவாக 15 பேரும் மற்றப் பல கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.க்கள் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்மாயிலுக்கு மஇகா ஆதரவு
இதனிடையே, அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தமது தலைமையில் புதிய அரசாங்கம் அமைய பெரிக்கத்தான் முன்னணி எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்குக் கைம்மாறாக, தம்வசம் இருந்த துணைப் பிரதமர் பொறுப்பை அவர் பெர்சத்து கட்சிக்கு வழங்கக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஸாஹிட் தரப்பையும் அவர் சரிக்கட்ட முடிந்தால், 115 எம்.பி.க்களின் ஆதரவுடன் அவர் ஆட்சியில் அமரலாம்.
இந்நிலையில், அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன், திரு இஸ்மாயிலுக்குப் பலரது ஆதரவு இருப்பதால் புதிய பிரதமராக அவருக்கு ஆதரவு அளிக்கும்படி திரு ஸாஹிட்டைக் கேட்டுக்கொண்டுள்ளதாக மலேசியாகினி செய்தி கூறுகிறது.

