தலிபான் வசமானது காபூல்; போர் முடிந்ததாக அறிவிப்பு

தலிபான் வசமானது காபூல்; போர் முடிந்ததாக அறிவிப்பு

2 mins read
e83f0314-e85b-4ddc-9a8d-4d819be64ec3
ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டதையடுத்து, நாட்டைவிட்டு வெளியேற விரும்பி ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியிலும் நேற்று குவிந்திருந்தனர். படம்: ஏஎஃப்பி -

ஆப்கானிஸ்தான் தலை­ந­கர் காபூ­லில் உள்ள அதி­பர் மாளி­கை­யைக் கைப்­பற்­றி­யதை அடுத்து, அந்நாட்டில் போர் முடி­விற்கு வந்­து­விட்­ட­தா­கத் தலி­பான் அமைப்பு அறி­வித்­துள்­ளது.

தலி­பான் படை­கள் காபூல் நக­ரி­னுள் நேற்று முன்­தி­னம் நுழைந்­த­தும், ரத்­தக்­க­ள­ரி­யைத் தவிர்க்க விரும்­பு­வ­தா­கக் கூறி, ஆப்­கான் அதி­பர் அஷ்­ரஃப் கனி நாட்­டை­விட்­டுத் தப்பி­யோடி விட்­டார்.

"ஆப்­கான் மக்­க­ளுக்­கும் தலி­பான் போராளி­க­ளுக்­கும் இன்­றைய நாள் (நேற்று) மிகச் சிறந்த நாள். தங்­க­ளின் 20 ஆண்­டு­கா­லப் போராட்­டங்­க­ளுக்­கும் தியா­கங்­க­ளுக்­கு­மான பலனை அவர்­கள் கண்­டுள்­ள­னர்," என்று தலி­பான் பேச்­சா­ளர் முகம்­மது நயீம் தெரிவித்தார்.

ஆப்­கா­னில் அமை­யும் புதிய அரசு எத்­த­கை­ய­தாக இருக்­கும் என்­பது விரை­வில் தெளி­வு­ப­டுத்­தப்­படும் என்ற அவர், தனி­மைப்­படுத்­தப்­ப­டு­வதை தலி­பான் விரும்­ப­வில்லை என்­றும் அமை­தியான அனைத்­து­லக உற­வு­களுக்கு வேண்­டு­கோள் விடுக்­கிறது என்­றும் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, காபூ­லி­ல் உள்ள தனது தூத­ர­கத்­திலிருந்து கொடியை இறக்­கிய அமெ­ரிக்கா, தூத­ர­கப் பணி­யா­ளர்­கள் அனை­வ­ரை­யும் விமான நிலை­யத்­திற்கு இடம்­பெ­ய­ரச் செய்­தது. விமா­னப் போக்­கு­வ­ரத்­துக் கட்­டுப்­பாட்டை அமெ­ரிக்­கப் படை­கள் தம்­வ­சம் கொண்டு வந்­தன.

ஆயினும், நாட்­டை­விட்டு வெளி­யேற விரும்பி, ஆயி­ரக்­க­ணக்­கான ஆப்­கா­னி­யர்­கள் நேற்று காபூல் விமான நிலை­யத்தை முற்­று­கை­யிட்­ட­னர். இதனையடுத்து, அமெரிக்கப் படையினர் வானை நோக்கிச் சுட்டு, அவர்களை எச்சரித்தனர். சரக்கு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

இத்தகைய சூழலில், ஆப்­கான் வான்­வெளி­யைத் தவிர்க்­கும்­வி­த­மாக முன்­னணி விமா­னப் போக்கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் தங்­க­ளது விமா­னங்­க­ளின் பயண வழி­களை மாற்றி வரு­கின்­றன. இந்த மாற்­றம், அமெ­ரிக்­கா­வில் இருந்து இந்­தியா செல்­லும் பல விமா­னங்­க­ளைப் பாதித்­துள்­ள­தாக யுனை­டெட் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.