தடுப்பூசியால் கடும் பக்கவிளைவு: 144 பேர்க்கு $782,000 நிதியுதவி

தடுப்பூசியால் கடும் பக்கவிளைவு: 144 பேர்க்கு $782,000 நிதியுதவி

2 mins read
eceb1958-ecf9-4ae6-b24e-1648e0efd4d5
-

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு, கடும் பக்கவிளைவுகள் ஏற்பட்ட நோயாளிகள் இருவர்க்குத் தலா $225,000 நிதியுதவி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இத்தகைய சூழலில் வழங்கப்பட்ட தொகையில் இதுவே ஆக அதிகம் என்று கூறப்பட்டது.

கொவிட்-19 தடுப்பூசியில் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட 16 வயது இளையர் ஒருவர்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

நிதியுதவி பெற்ற மற்றொருவர் குறித்த விவரங்களை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிடவில்லை. "$225,000 என்ற முதலாம் அடுக்கு வழங்குதொகைக்கு இதுவரை இரண்டு பேர் தகுதிபெற்றுள்ளனர்," என்று அந்தப் பேச்சாளர் 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.

இவ்வாண்டு முற்பாதியில் தடுப்பூசி காயங்களுக்கான நிதியுதவித் திட்டம் (விஐஎஃப்ஏபி) தொடங்கப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், மருத்துவ ரீதியாகக் குறிப்பிடத்தக்க கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுவோர்க்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வோர்க்கு மிகுந்த மன அமைதியை அளிப்பதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, 'விஐஎஃப்ஏபி' திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தோரில் தகுதியுடைய 144 பேர்க்கு மொத்தம் $782,000 வழங்கப்பட்டுள்ளது அல்லது வழங்கப்படவுள்ளது என்று அமைச்சு தெரிவித்தது. 'விஐஎஃப்ஏபி' திட்டம் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை, முன்னரே நிர்ணயிக்கப்பட்டது என்றும் பக்கவிளைவின் கடுமையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும் என்றும் அமைச்சு தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பக்கவிளைவுகள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. முதல் பிரிவின்கீழ், தடுப்பூசியால் மரணமோ நிரந்தரமாக கடும் உடற்குறைபாடோ ஏற்பட்டால் ஒருமுறை மட்டும் $225,000 நிதியுதவி வழங்கப்படும்.

இரண்டாவது பிரிவின்கீழ், மருத்துவமனையின் உயர்நிலை சிகிச்சைப் பிரிவிலோ தீவிர சிகிச்சைப் பிரிவிலோ சேர்க்கப்பட்டு, படிப்படியாக குணமடையும் சாத்தியம் உள்ளோர்க்கு $10,000 வழங்கப்படும். மூன்றாவது பிரிவின்கீழ் வருவோர், மருத்துவமனையின் உள்நோயாளிச் சேவையையும் மருத்துவ சிகிச்சையையும் நாடி, குணம் அடையும் சாத்தியம் உள்ள நிலையில் $2,000 பெறுவர்.