மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற தங்களின் தெரிவுகளை 220 எம்.பி.க்களும் இன்று மாலை நான்கு மணிக்குள் தமக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று மாமன்னர் கெடு வைத்துள்ளார். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள முடக்கநிலையைத் தீர்ப்பதற்காக மாமன்னர் தலையிட்டு உள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் முகைதீன் யாசின் அறிவித்ததை அடுத்து, மாமன்னர் நேற்று பிரதான கட்சிகளின் தலைவர்களை ஒன்றாகச் சந்தித்துப் பேசினார். நேற்று நடந்த சந்திப்பில் அம்னோ, பெஜுவாங் தானா ஆயர் கட்சி, பார்ட்டி இஸ்லாம் செமலேசியா கட்சி மற்றும் பக்கத்தான் ஹரப்பானின் மூன்று தனிக்கட்சிகளும் கலந்துகொண்டன.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசினார்.
"அரசியல் அமைப்புமுறை மாறவேண்டும் என்றார் மாமன்னர். தோல்வியைத் தழுவுவோரை வெற்றி பெறுபவர் இனி ஒடுக்கக்கூடாது என்பதே இதன் பொருள்.
"அனைத்துக் கட்சிகளின் பலத்தையும் ஒன்று திரட்டவேண்டும் என்ற புரிந்துணர்வு புதிதாக ஏற்படவேண்டும். கொவிட்-19 சிக்கல், பொருளியல் மீட்சி இரண்டையும் எதிர்கொள்ளும் வகையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
"அனைவரும் தங்களின் கருத்துகளைக் கூறினர். பழைய முறையில், சலிப்புத் தட்டும் வகையில் அரசியல் நடத்துவது இனி வேண்டாம் என்ற ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்," என்றார்.
பிரதான கட்சிகளை ஒரே சமயத்தில் சந்தித்துப் பேசியதன் மூலம், அரசியல்வாதிகள் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒன்றிணைந்த அரசாங்கத்திற்கான சமரச வேட்பாளர் ஒருவரை முன் நிறுத்தச் செய்வதே மாமன்னரின் நோக்கம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை நான்கு மணிக்குள் மலேசியாவின் 220 எம்.பி.க்களும் தங்களின் முடிவு குறித்து மாமன்னருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நாயகர் அஸார் ஹருன் கடிதம்வழி தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையைக் கொண்ட தலைவர் யாரும் இல்லாத நிலையில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் சவால்மிக்க பொறுப்பு மாமன்னரின் வசம் வந்துள்ளது.
பெரும்பான்மை இல்லாவிடில் அவசரநிலை அறிவிப்பு
தங்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதாக எந்த ஓர் உறுப்பினராலும் காட்ட முடியாத நிலையில், மலேசிய மாமன்னர் அவசரநிலை அறிவிப்பார்.
அத்துடன் தேசிய செயல்பாட்டு மன்றம் என்ற ஒன்றையும் அவர் அமைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் இந்த மன்றம், 15வது பொதுத் தேர்தல் நடக்கும்வரை தற்காலிகமாக நாட்டு நிர்வாகம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் என்று கூறப்பட்டது.
மாமன்னரின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் மன்றத் தலைவர், நாட்டு நிர்வாகத்தை மேற்பார்வை இடுவார்.
திரு முகைதீனின் உருக்கமான காணொளிப் பதிவு
இதற்கிடையே, தற்போது மலேசியாவின் இடைக்காலப் பிரதமராக உள்ள திரு முகைதீன், பிரதமராகத் தமது 18 மாதப் பயணம் தொடர்பில் உருக்கமான காணொளிப் பதிவு ஒன்றைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'மலேசியர்களுக்கு நன்றி' என்பதே அக்காணொளியின் தலைப்பு.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத் தேர்தலில் தமது தலைமையில் பெர்சத்து போட்டியிடும் என்று திரு முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

