வர்த்தகம், சுற்றுலா தொடர்பான பயணிகளுக்கு சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு ஆயுத்தமாகி வரும் நிலையில், இங்கு கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
இங்குள்ள சுகாதாரப் பராமரிப்பு வசதிகளின்மீது தாளாத சுமை ஏற்படுவதைத் தவிர்க்க, கிருமித் தொற்று நிலவரத்தை அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாக கவனிக்கும் என்றார் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திருகான்.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலின் சுருக்கத்தை அவர் லிங்க்ட்இன் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். அதிகமான பயணிகள் வெளிநாட்டிலிருந்து வந்தாலும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க, நடைமுறைக்கு ஏற்ற, அடிப்படைப் பாதுகாப்பு நட வடிக்கைகளைத் தொடர்ந்து நடப்பில் வைத்திருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
"எந்த அளவுக்கு நமது எல்லைகளைத் திறப்பதைச் சிறப்பாகக் கையாள்கிறோம் என்பதையும் தொற்று எண்ணிக்கை பேரளவு உயராமல் இருப்பதை உறுதி செய்கிறோம் என்பதையும் பொறுத்தே, சமூகத்தில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்," என்றார் திரு கான்.
மேலும், சிங்கப்பூர் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிடுவது திட்டம் என்றும் அதன் பின்னர் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று முதல் வேலையிடங்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கூடுதல் ஊழியர்கள் அங்கு சென்று வேலை செய் வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
படிப்படியாக எல்லைகளைத் திறந்துவிடும் முன்னோடி ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பயணிகளை இங்கு வர அனுமதிப்பது பற்றி சிங்கப்பூர் பரிசீலித்து வருவதாக திரு கான் கூறினார். அத்துடன், பயணிகள் செல்லும் இடங்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுலா பயணங்களை அனுமதிக்கும் வழிகள் பற்றியும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக திரு கான் சொன்னார்.
சிங்கப்பூர் கணிசமான எண்ணிக்கையிலான நாடுகளுடன் அது குறித்து பேசி வருவதாகவும் நாடுகளின் தொற்று எண்ணிக்கை, தடுப்பூசி போட்டுக்கொண் டோரின் விகிதம், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் விவரித்தார்.
புளூம்பெர்க் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலின்போது, எந்தச் சூழ்நிலையில் சிங்கப்பூர் மீண்டும் கிருமித்தொற்று கட்டுப்பாடுகளைக் கடுமையாகக் கூடும் என்று திரு கானிடம் கேட்கப்பட்டது. அது பல்வேறு அம்சங்களைப் பொறுத்தது என்றும் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தொற்றுச் சம்பவங்கள் பன்மடங்கு பெருகும் சூழ்நிலை அவற்றில் ஒன்று என பதில் அளித்தார் அமைச்சர். அத்தகைய சம்பவங்கள் பன் மடங்கு பெருகினால், மருத்துவமனை படுக்கைகள், வசதிகள் போன்றவை பிரச்சினையாகும் என்றார் அவர்.
ஆனால், மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் தொற்றுச் சம்பவங்கள் குறைவான விகிதத்தில் அதிகரிப்பதை உறுதிசெய்ய முடிந்தால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசாங்கம் போகப்போக மருத்துவமனைகளின் ஆற்றலை உயர்த்தும் என்றார் அவர்.
கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பாற்றலை அதிகமாக்கும் கூடுதல் தடுப்பூசிகள் போடுவதில் சிங்கப்பூரின் நிலைப்பாடு பற்றியும் திரு கானிடம் கேட்கப்பட்டது. கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான நிபுணர்கள் குழு, அது பற்றிய உலகளாவிய தரவுகளை ஆராய்ந்து வருவதாகக் கூறிய திரு கான், நேரம் வரும்போது குறிப்பாக தடுப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசிகளை அரசாங்கம் அறிமுகம் செய்யலாம் என்றார்.

