எல்லைகள் திறக்கப்படும்போது பயணிகள் வரவால் தொற்று அதிகமாகலாம்; தொற்றுச்சூழல் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் கான்: கிருமிப்பரவல் மீண்டும் பெருகலாம்

எல்லைகள் திறக்கப்படும்போது பயணிகள் வரவால் தொற்று அதிகமாகலாம்; தொற்றுச்சூழல் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் கான்: கிருமிப்பரவல் மீண்டும் பெருகலாம்

3 mins read

வர்த்­த­கம், சுற்­றுலா தொடர்­பான பய­ணி­க­ளுக்கு சிங்­கப்­பூர் அதன் எல்­லை­களை மீண்­டும் திறப்­ப­தற்கு ஆயுத்­த­மாகி வரும் நிலை­யில், இங்­கு கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கூறி­யுள்­ளார்.

இங்­குள்ள சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­க­ளின்மீது தாளாத சுமை ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க, கிரு­மித் தொற்று நில­வ­ரத்தை அர­சாங்­கம் தொடர்ந்து அணுக்­க­மாக கவ­னிக்­கும் என்­றார் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு­கான்.

புளூம்­பெர்க் செய்­தி ­நி­று­வ­னத்­துக்கு அளித்த நேர்­கா­ண­லின் சுருக்­கத்தை அவர் லிங்க்ட்­இன் சமூக ஊடகத்தில் தெரி­வித்­தார்.

அதி­க­மான பய­ணி­கள் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­தா­லும் தொற்று எண்­ணிக்­கை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க, நடை­மு­றைக்கு ஏற்ற, அடிப்­ப­டைப் பாது­காப்பு நட ­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து நடப்­பில் வைத்­தி­ருப்­பது அவ­சி­யம் என்று அவர் கூறி­னார்.

"எந்த அள­வுக்கு நமது எல்­லை­களைத் திறப்­ப­தைச் சிறப்­பாகக் கையாள்­கி­றோம் என்­ப­தை­யும் தொற்று எண்­ணிக்கை பேரளவு உய­ரா­மல் இருப்­பதை உறுதி செய்­கி­றோம் என்­ப­தை­யும் பொறுத்தே, சமூ­கத்­தில் பாது­காப்­புக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும்," என்­றார் திரு கான்.

மேலும், சிங்­கப்­பூர் மக்­கள்­ தொகை­யில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு செப்­டம்­பர் மாதத்­துக்­குள் முழு­மை­யாகத் தடுப்பூ­சி போட்­டு­வி­டு­வது திட்­டம் என்­றும் அதன் பின்­னர் இன்­னும் அதி­க­மான கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த முடி­யும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இன்று முதல் வேலை­யி­டங்­களில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு, கூடு­தல் ஊழி­யர்­கள் அங்கு சென்று வேலை செய்­ வ­தற்கு அர­சாங்­கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

படிப்­ப­டி­யாக எல்­லை­க­ளைத் திறந்­து­வி­டும் முன்­னோடி ஏற்­பா­டு­க­ளின் ஒரு பகு­தி­யாக, ஆஸ்­தி­ரே­லியா, ஜெர்­மனி, கனடா, தென்கொரியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த, தடுப்­பூ­சிப் போட்­டுக் கொண்ட பய­ணி­களை இங்கு வர அனு­ம­திப்­பது பற்றி சிங்­கப்­பூர் பரி­சீ­லித்து வரு­வ­தாக திரு கான் கூறி­னார்.

அத்­து­டன், பய­ணி­கள் செல்­லும் இடங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்தி, சுற்­றுலா பய­ணங்­களை அனு­ம­திக்­கும் வழி­கள் பற்­றி­யும் அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தாக திரு கான் சொன்­னார்.

சிங்­கப்­பூர் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான நாடு­க­ளு­டன் அது குறித்து பேசி வரு­வ­தா­க­வும் நாடு­க­ளின் தொற்று எண்­ணிக்கை, தடுப்­பூசி போட்­டுக்­கொண் டோரின் விகி­தம், தொற்­றுப்­ ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் ஆற்­றல் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு முடி­வெ­டுக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

புளூம்­பெர்க் செய்­தி ­நி­று­வ­னம் நடத்­திய நேர்­கா­ண­லின்­போது, எந்­தச் சூழ்­நி­லை­யில் சிங்­கப்­பூர் மீண்­டும் கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யா­கக் கூடும் என்று திரு கானி­டம் கேட்­கப்­பட்­டது. அது பல்­வேறு அம்­சங்­க­ளைப் பொறுத்­தது என்­றும் மருத்­து­வ­ மனை­யில் தங்கி சிகிச்சை பெற வேண்­டிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பன்­ம­டங்கு பெரு­கும் சூழ்­நிலை அவற்­றில் ஒன்று என பதில் அளித்­தார் அமைச்­சர்.

அத்­த­கைய சம்­ப­வங்­கள் பன்­ ம­டங்கு பெரு­கி­னால், மருத்­து­வ­மனை படுக்­கை­கள், வச­தி­கள் போன்­றவை பிரச்­சி­னை­யா­கும் என்­றார் அவர்.

ஆனால், மருத்­து­வ­மனை சிகிச்சை தேவைப்­படும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறை­வான விகி­தத்­தில் அதி­க­ரிப்­பதை உறு­தி­செய்ய முடிந்­தால், அதற்கு ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் அர­சாங்­கம் போகப்­போக மருத்­து­வம­னை­க­ளின் ஆற்­றலை உயர்த்­தும் என்­றார் அவர்.

கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பாற்­றலை அதி­க­மாக்­கும் கூடு­தல் தடுப்­பூ­சி­கள் போடு­வ­தில் சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாடு பற்­றி­யும் திரு கானி­டம் கேட்­கப்­பட்­டது.

கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான நிபு­ணர்­கள் குழு, அது பற்­றிய உல­க­ளா­வி­ய தர­வு­களை ஆராய்ந்து வரு­வ­தா­கக் கூறிய திரு கான், நேரம் வரும்­போது குறிப்­பாக தடுப்­பாற்­றல் குறை­வாக உள்­ள­வர்­க­ளுக்கு கூடு­தல் தடுப்­பூ­சி­களை அர­சாங்­கம் அறி­மு­கம் செய்­ய­லாம் என்­றார்.