மலேசியாவில் புதிதாக நியமிக்கப்படவுள்ள பிரதமர் முடிந்தவரை விரைவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தமக்கான ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று அந்நாட்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா உத்தரவிட்டுள்ளார்.
மாமன்னர் நேற்று முன்தினம் அரசியல் கட்சிகளுடன் நடத்திய சந்திப்பில் இவ்வாறு தெரிவித்ததாக அரண்மனை நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
மேலும், புதிய பிரதமரை உறுதிப்படுத்த ஒன்பது மாநில மன்னர்களுடன் நாளை மாமன்னர் சந்திப்பு நடத்தப் போவதாக நேற்றைய அறிக்கை குறிப்பிட்டது.
மாநில மன்னர்களுடனான அச் சிறப்புச் சந்திப்பில் தற்போதைய விவகாரங்கள் பற்றி பேசப்படும்.
அண்மைய வாரங்களில் நிலவிய அரசியல் நெருக்கடியின் காரணமாக முன்னையப் பிரதமர் முகைதீன் யாசின் நேற்று முன்தினம் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களில் மலேசியாவில் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பிரதமரை அடையாளம் காணும் பணி தொடரும் வேளையில் அனைத்து கட்சிகளும் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்றும் மாமன்னரின் அறிக்கை கூறியது.
மலேசிய நாடாளுமன்றத்தில் உள்ள 220 உறுப்பினர்களும் நேற்று பிற்பகல் 4 மணிக்குள் பிரதமராக தாங்கள் முன்மொழியும் பெயரை அரண்மனையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாமன்னர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
ரகசியமாக சமர்ப்பிக்கப்படும் அந்தப் பெயர்களில் ஒருவருக்கு தெளிவான பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில், மலேசிய மாமன்னர் அவருக்கு உடனடியாக பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
முன்னைய துணைப் பிரதமரும் அம்னோ கட்சியின் துணைத் தலைவருமான திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப், முன்னைய துணைப் பிரதமரும் எதிர்த்தரப்புத் தலைவருமான டாக்டர் அன்வார் இப்ராஹிம் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி அரசியல் கட்சிகள் கடந்த இரண்டு நாள்களாக முடிவு எடுத்து வந்த நிலையில் திரு இஸ்மாயில் சப்ரிதான் அடுத்த பிரதமர் ஆகக் கூடும் என்று நம்பப்படுகிறது.
ஆளும் கூட்டணியில் உள்ள அம்னோ, பெர்சத்து, பாஸ் ஆகியவை திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.
அம்னோவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரு இஸ்மாயில் சப்ரியை ஒருமனதாக தேர்வு செய்தனர் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அகமது மாஸ்லான் தெரிவித்தார்.
பெர்சத்து கூட்டணியின் உச்சமன்ற உறுப்பினர் திரு எஸ்ஸி சயாஸ்லீ ஷீத், கூட்டணியின் 35 மன்ற உறுப்பினர்களும் திரு இஸ்மாயில் சப்ரியை பிரதமர் தெரிவாக உறுதி செய்துள்ளனர் என்று கூறினார். 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாஸ் கட்சியும் திரு இஸ்மாயில் சப்ரியைத் தெரிவு செய்துள்ளதாகக் கூறியது.
டாக்டர் அன்வார் இப்ராஹிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியையும் மற்ற எதிர்க்கட்சிகளையும் சேர்த்தால் அவருக்கு சுமார் 105 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி, நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை ஆகிய வற்றைப் பெற அவருக்கு 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

