கொவிட்-19 தொற்றிய நிலையில் இலேசாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதியிலிருந்து வீட்டிலேயே குணமடைய வழிவகுக்கும் இல்லத் தனிமை முன்னோட்டத் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கவிருக்கிறது.
இலேசான அல்லது கொவிட்-19 அறிகுறியே இல்லாதோர், வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்றால் அத்தகையோர் இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறுவர் என்று சுகாதார அமைச்சு இன்று (ஆகஸ்ட் 19) தெரிவித்தது.
எனினும், அத்தைய நோயாளிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
எடுத்துக்காட்டாக, வீட்டில் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கர்ப்பிணிகள், மூத்தோர், நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளோர் ஆகிய எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பிரிவுகளைச் சேராதவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
இதுகுறித்து இன்று மாலை நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், கொவிட்-19 நோயுடன் சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள சிங்கப்பூர் முன்னெடுக்கும் பயணத்தில் இந்த முன்னோட்டத் திட்டம் முக்கிய படி என்று வர்ணித்தார்.

