உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியலில் இடம்பெறும் ஒரு தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட பயணிகள், சிங்கப்பூர் வரும்போது தடுப்பூசி அடிப்படையிலான வெவ்வேறு பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தகுதிபெறுவர்.
இதன் தொடர்பில் இன்று (ஆகஸ்ட் 19) அறிவித்த சுகாதார அமைச்சு, நாளை இரவு 11.59 மணிமுதல் சிங்கப்பூருக்குள் வருவோருக்குச் சேதம் புகா தன்மையுடைய ஒட்டுவில்லைகளை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வழங்கும் என்று குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் போடப்படும் 'ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி' மற்றும் 'மொடர்னா' தடுப்பூசிகளுடன் 'ஆஸ்ட்ராஸெனிகா', 'ஜான்சன் & ஜான்சன்', 'சினோஃபார்ம்', 'சினோவேக்' மற்றும் 'கொவிஷீல்டு' தடுப்பூசிகளும் இப்பட்டியலில் அடங்கும்.
சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச்சாவடிகளுக்கு வரும் பயணிகள், தங்களின் கடப்பிதழில் இடுவதற்காக இந்த ஒட்டுவில்லையைப் பெற்றுக்கொள்வதற்கு முன் தங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருப்பதைக் காட்டும் ஆங்கில மொழி சான்றிதழ் ஒன்றை அதிகாரிகளிடம் காட்டவேண்டும்.
அடுத்த மாதத்திற்குள் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், மற்ற நாடுகளிலிருந்து பயணிக்கும் நீண்டகால அட்டை வைத்திருப்போர் மற்றும் குறுகியகால வருகையாளர்கள் ஆகியோரை 'டிரேஸ்டுகேதர் செயலி அல்லது சாதனம் வழி 'சேஃப்என்ட்ரி பிசினஸ்' செயலி மூலம் அடையாளம் காணும் வகையில் கணினிக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டது சுகாதார அமைச்சு.
இதனால் சிங்கப்பூரில் வெவ்வேறு பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு அவர்கள் தகுதிபெறுவர். இதன்படி, நிகழ்வுக்கு முன்னதாக பரிசோதனை செய்துகொள்வது போன்ற நடைமுறை தேவைப்படாமல் அமர்ந்து சாப்பிட முடியும்.
மற்ற பயணிகள் அதே பரிசோதனையை மேற்கொண்டு அதில் தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பரிசோதனை 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

