இன்று மலேசியாவின் புதிய பிரதமர் யார் என்று முடிவாகும் நாள். இந்நிலையில், மலேசியாவின் அடுத்த பிரதமர் ஆவதற்கு அம்னோ கட்சித் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணி, நிபந்தனையுடன் கூடிய ஆதரவு நல்கும் என்பதை இடைக்கால பிரதமரும் 'பிஎன்' தலைவருமான திரு முகைதீன் யாசின் உறுதிப்படுத்தி உள்ளார். திரு இஸ்மாயில் பிரதமராகப் பதவியேற்றால், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோர் அவரது அமைச்சரவையில் இடம்பெறக் கூடாது என்பதே அந்த நிபந்தனை.
"மாமன்னர் அவரைப் பிரதமராக நியமித்தால், அவரின் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கம் உடையவர்களாக, நம்பிக்கைக்கு உரியவர்களாக, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்காதவர்களாக இருக்க வேண்டும்," என்று திரு முகைதீன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
திரு இஸ்மாயில் பிரதமர் ஆவதற்கான தங்களின் தெரிவை உறுதிப்படுத்த 114 எம்.பி.க்கள் நேற்று அரசர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டதாக அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமது மஸ்லான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒவ்வோர் எம்.பியும் மாமன்னரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசியதாகவும் அவர் கூறினார். தங்களின் பெயர், தொகுதியைத் தெரிவித்த பின்னர் எந்தவொரு வற்புறுத்தலும் இன்றி திரு இஸ்மாயிலுக்கான தங்கள் ஆதரவு உள்ளதாக எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, மாமன்னரைச் சந்திக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அறியப்படுகிறது. திரு இஸ்மாயிலுக்கு 114 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவரும் பிகேஆரின் தலைவருமான அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆக, போதுமான ஆதரவு இல்லை என்பது புலனாகியுள்ளது. திரு முகைதீனின் நிர்வாகத்தில் திரு இஸ்மாயில்
துணைப் பிரதமராக இருந்தார்.

