இரட்டைக் கொண்டாட்டம், இரட்டிப்பு மகிழ்ச்சி

இரட்டைக் கொண்டாட்டம், இரட்டிப்பு மகிழ்ச்சி

2 mins read
7151df61-5079-4f6e-91ad-c4cdbdf08ef8
மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெற்ற இறுதி தேசிய தினக் கொண்டாட்டத்தில் தொழில்நுட்பமும் முப்பரிமாணக் காட்சிகளும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக்கின; வண்ண விளக்குகள் மேடையையும் காலி இருக்கைகளையும் நிறைத்தன. மிதக்கும் மேடை 'என்எஸ்' சதுக்கத்திற்கு வழிவிடுகிறது. படம்: சாவ் பாவ் -

இர்­ஷாத் முஹம்­மது

சிங்­கப்­பூ­ரின் தேசிய கீதத்தில் தொடங்கி, தேசிய தினத்தை முன்­னிட்டு சிறப்­பா­கத் தயா­ரிக்­கப்­பட்ட நாட்­டுப் பாடல்­களும் உணர்ச்­சிப் பெருக்­கு­டன் ஒலிக்க, வாண­வேடிக்­கை­கள் மகிழ்ச்­சிப் பூக்­களை வானி­லி­ருந்து தூவ, சிங்­கப்­பூர் மக்­கள் அனை­வ­ரும் நேற்று நாட்­டின் 56வது பிறந்­த­நாளை இரண்­டா­வது முறை­யா­கக் கொண்­டாடி இன்­புற்­ற­னர்.

சுதந்­திர சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக இந்த ஆண்டு தேசிய தின அணி­வகுப்பை மக்­கள் இரண்­டா­வது முறை­யா­கக் கண்­டு­க­ளித்­த­னர். வழ­மை­யாக, தேசிய தின­மான ஆகஸ்ட் 9ஆம் தேதி நடை­பெ­றும் இந்­நி­கழ்ச்சி, கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க ஆகஸ்ட் 18 வரை நடப்­பி­லி­ருந்த கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. தேசிய தின­மான ஆகஸ்ட் 9ஆம் தேதி­யன்று காலை­யில் 100 பேர் மட்­டும் கலந்­து­கொண்ட சடங்கு­பூர்வ அணி­வகுப்பு இடம்­பெற்­றது.

மீள்­தி­ற­னு­டன், கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லின் பல்­வேறு சவால்­க­ளுக்­கி­டையே சிறப்­பாக நடை­பெற்ற தேசிய தினக் கொண்­டாட்­டத்தை 600 பேர் படைத்­த­னர். வழக்­க­மாக 2,000க்கும் மேற்­பட்­டோர் படைக்­கும் இந்­நி­கழ்ச்­சி­யில் இம்­முறை படைப்­பா­ளர்­கள் எண்­ணிக்கை குறை­வெ­னி­னும் குதூ­கலத்திற்குக் குறைவில்லை. நாட்­டின் அதி­பர் ஹலிமா யாக்­கோப் மாலை 7 மணி­ய­ள­வில் அரங்­கிற்கு வந்­த­தும் சடங்­கு­பூர்வ அணி­வகுப்பு தொடங்­கி­யது. ஹெலி­காப்­ட­ரில் பெரிய தேசிய கொடி வானில் பறக்க, 'மாஜுலா சிங்­கப்­பூரா' என்று அதி­பர் முதல், மரினா மிதக்­கும் மேடை­யில் திரண்­டி­ருந்த அத்­தனை பேரும் ஒரு­மித்த குர­லில் பாட, பொங்­கிய தேச உணர்வு பல நாள்­க­ளுக்­குப் பிறகு மக்­களிடம் உவ­கை­யூட்­டி­யது.

கடு­ம் சிர­மங்­களை வெற்­றி­கொண்ட பல தலை­மு­றை­யி­ன­ரின் உணர்வு­பூர்­வ­மான கொண்­டாட்­ட­மாக அமைந்த தேசிய தின நிகழ்ச்சி­யில், அணி­வகுப்­பில் பங்­கேற்ற படைவீரர்­கள், கலை­ஞர்­கள், பிர­த­மர் லீ சியன் லூங், நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள், முன்­னாள் தலை­வர்­கள், பொது­மக்­களுடன் வீடு­களில் தொலைக்­காட்சி எதிரே அமர்ந்­திருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களும் ஒன்­றி­ணைந்­த­னர். இந்த தேசிய தின இரட்­டைக் கொண்­டாட்­டத்­தில் திளைத்து இரட்­டிப்பு மகிழ்ச்­சி­ அடைந்தனர்.