இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூரின் தேசிய கீதத்தில் தொடங்கி, தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட நாட்டுப் பாடல்களும் உணர்ச்சிப் பெருக்குடன் ஒலிக்க, வாணவேடிக்கைகள் மகிழ்ச்சிப் பூக்களை வானிலிருந்து தூவ, சிங்கப்பூர் மக்கள் அனைவரும் நேற்று நாட்டின் 56வது பிறந்தநாளை இரண்டாவது முறையாகக் கொண்டாடி இன்புற்றனர்.
சுதந்திர சிங்கப்பூரின் வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பை மக்கள் இரண்டாவது முறையாகக் கண்டுகளித்தனர். வழமையாக, தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சி, கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க ஆகஸ்ட் 18 வரை நடப்பிலிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று காலையில் 100 பேர் மட்டும் கலந்துகொண்ட சடங்குபூர்வ அணிவகுப்பு இடம்பெற்றது.
மீள்திறனுடன், கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலின் பல்வேறு சவால்களுக்கிடையே சிறப்பாக நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தை 600 பேர் படைத்தனர். வழக்கமாக 2,000க்கும் மேற்பட்டோர் படைக்கும் இந்நிகழ்ச்சியில் இம்முறை படைப்பாளர்கள் எண்ணிக்கை குறைவெனினும் குதூகலத்திற்குக் குறைவில்லை. நாட்டின் அதிபர் ஹலிமா யாக்கோப் மாலை 7 மணியளவில் அரங்கிற்கு வந்ததும் சடங்குபூர்வ அணிவகுப்பு தொடங்கியது. ஹெலிகாப்டரில் பெரிய தேசிய கொடி வானில் பறக்க, 'மாஜுலா சிங்கப்பூரா' என்று அதிபர் முதல், மரினா மிதக்கும் மேடையில் திரண்டிருந்த அத்தனை பேரும் ஒருமித்த குரலில் பாட, பொங்கிய தேச உணர்வு பல நாள்களுக்குப் பிறகு மக்களிடம் உவகையூட்டியது.
கடும் சிரமங்களை வெற்றிகொண்ட பல தலைமுறையினரின் உணர்வுபூர்வமான கொண்டாட்டமாக அமைந்த தேசிய தின நிகழ்ச்சியில், அணிவகுப்பில் பங்கேற்ற படைவீரர்கள், கலைஞர்கள், பிரதமர் லீ சியன் லூங், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், பொதுமக்களுடன் வீடுகளில் தொலைக்காட்சி எதிரே அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒன்றிணைந்தனர். இந்த தேசிய தின இரட்டைக் கொண்டாட்டத்தில் திளைத்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர்.

