மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக நேற்று பதவியேற்ற திரு
இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு பிரதமர் லீ சியன் லூங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். திரு இஸ்மாயிலுடன் நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய திரு லீ,
அவருக்கு வாழ்த்து கூறும் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நீண்டகால
நல்லுறவை இருநாடுகளின் தலைவர்களும் மறுஉறுதி செய்துள்ளனர்.
இருநாடுகளும் எதிர்நோக்கும் கொவிட்-19 நெருக்கடிநிலை போன்ற சவால்களை முறியடிக்க ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. திரு இஸ்மாயிலின் தலைமையின்கீழ் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு தொடர்ந்து செழிப்பாக, நட்புணர்வு நிறைந்து இருக்கும் எனத் தாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டார்.
"இரு நாடுகளுக்கும் பொதுவான ஆர்வங்களும் இலக்குகளும் உள்ளன. இருநாட்டு மக்கள்
பலருக்கு ரத்த பந்தமும் உள்ளது.
"இருநாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்களை ஒன்றிணைந்து முறியடிக்க இதுவரை ஆட்சியில் இருந்துள்ள மலேசிய அரசாங்கங்களுடன் சிங்கப்பூர் மிக அணுக்கமாகச் செயல்பட்டு
வந்துள்ளது," என்று திரு லீ தமது கடிதத்தில் குறிப்பிட்டார்.
பொதுச் சேவையிலும் அரசாங்கத்திலும் திரு இஸ்மாயிலுக்கு நிறைய அனுபவம் இருப்பதாக திரு லீ கூறினார். அவர் பல அமைச்சு களுக்குத் தலைமைதாங்கியவர் என்றும் அதனைத் தொடர்ந்து, முந்தைய அரசாங்கங்களின் துணைப் பிரதமராகவும் மூத்த அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்றும் திரு லீ கூறினார்.
"உங்கள் தலைமையின்கீழ் மலேசியா தொடர்ந்து வெற்றிநடை போட்டு செல்வ செழிப்புடன் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இருநாட்டு ஒத்துழைப்பைப் பலப்படுத்த நீங்கள் பெரிதும் பங்காற்றி இருக்கிறீர்கள்," என்று திரு லீ தமது கடிதத்தில் எழுதியிருந்தார். இருநாடுகளும் பலன் அடைய வேண்டும் என்ற இலக்குடன், திரு இஸ்மாயிலைக் கூடிய விரைவில் சந்தித்து, இருநாடு
களுக்கும் இடையிலான ஒத்
துழைப்பை விரிவுபடுத்த விரும்புவதாக திரு லீ கூறினார்.
சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளும்படி திரு இஸ்மாயிலுக்குப் பிரதமர் லீ அழைப்பு விடுத்துள்ளார்.

