ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்று வரும் உடற்குறை உள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் (பாராலிம்பிக்ஸ்), சிங்கப்பூருக்குக் கிடைத்த முதல் பதக்கமே தங்கமாக அமைந்துவிட்டது.
100 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றில் நேற்று முதலாவதாக வந்த யிப் பின் சியூ, 29, அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இறுதிச்சுற்றில் அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 16.61 வினாடி.
அவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் ஜப்பானின் மியூக்கி யமாடா (2:26.18), மெக்சிகோவின் ஃபபியோலா ரமிரேஸ் (2:36.54) ஆகியோர் வந்தனர்.
முன்னதாக, தகுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடிக்க யிப் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 14.46 வினாடி.
2016ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில், இதே 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியில் யிப் உலகச் சாதனை படைத்திருந்தார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 7.09 வினாடி.
இதற்கிடையே, தொடக்கமே தங்கம் என்று கூறி பிரதமர் லீ சியன் லூங் தம் ஃபேஸ்புக் மூலம் யிப்புக்கு வாழ்த்து கூறியிருந்தார்.

