பயணத்துறை, வாழ்க்கைமுறைக்கான சேவைத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்கள், கொள்ளைநோய் சூழலில் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. நெருக்கடியிலிருந்து அவை மீண்டுவருவதற்குப் பல்வேறு வாழ்க்கைத்தொழில் மாற்றத் திட்டங்கள், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள்வழி மின்னிலக்க, தொழில்நுணுக்கத் திறன்களை ஊழியர்கள் பெறுவதுடன் புதிய வாய்ப்புகளையும் அமைத்துக்கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பும் நேற்று தெரிவித்தன. இதுபோன்ற திட்டங்கள் மூலம் 2019ல் இணைந்தோர் 40 நிறுவனங்களைச் சேர்ந்த 110 ஊழியர்கள் ஆவர்.
ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 3,100க்கும் அதிகமான ஊழியர்கள் இத்திட்டங்களின்கீழ் இணைந்துள்ளனர்.
தற்போது பயணத்துறை, வாழ்க்கைமுறைக்கான சேவைத் துறை ஆகிய இரண்டுக்கும் 23 திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்பர் வரை இத்திட்டங்கள் மூலம் மேலும் 1,400 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 கொள்ளைநோயால் இவ்விரு துறைகளில் உள்ள நிறுவனங்கள் அவற்றின் மின்னிலக்கமயமாகும் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.
சந்திப்புகள், நிகழ்வுகளை மெய்நிகராக நடத்துவது, எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு இடையே வெவ்வேறு நாடுகளைச் சுற்றிப்பார்க்க விரும்புவோருக்காக மெய்நிகர் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்வது, சுற்றுலாத் தளங்களில் நேரடித் தொடர்பு இல்லாத வண்ணம் சேவை வழங்குவது போன்ற வழிகளில் தொழில்நுட்பத்தைக் கையாள்வதை இத்துறைகளைச் சேர்ந்தோர் அறிவர்.
இத்தகைய உருமாற்றத் திட்டங்களுக்காக நிறுவனங்கள் தங்களின் வேலைகளையும் பொறுப்புகளையும் மறுவடிவமைக்க வேண்டி இருந்தது என்றார் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கு நேற்று சென்றிருந்த அவர், 24வது வேலை நிலவர அறிக்கை தொடர்பில் இதனைத் தெரிவித்தார்.
இணைய வர்த்தகம், தரவுப் பகுப்பாய்வு, மின்னிலக்க விற்பனை மற்றும் விளம்பரம் ஆகிய அம்சங்கள் தொடர்பிலான திறன்கள், பழைய ஊழியர்களுக்கும் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்கும் தேவைப்படுவதாக மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பும் தெரிவித்தன.

