காபூல் விமான நிலையத்திற்குப் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்திற்குப் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

2 mins read
24753373-8dcf-4120-93f0-09febb41d93b
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் III விமானத்தில் ஏற நேற்று முன்தினம் வரிசையில் காத்திருந்த ஆப்கானியர்கள். படம்: ஏஎஃப்பி -

காபூல் விமான நிலை­யத்­தில் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லுக்கு மிகுந்த அச்­சு­றுத்­தல் இருப்­ப­தால் அங்கு இருப்­ப­வர்­கள் அவ்­வி­டத்­தை­விட்டு அகன்று, பாது­காப்­பான இடங்­களுக்­குச் செல்­லும்­படி அமெ­ரிக்கா எச்­ச­ரித்­துள்­ளது.

அவ்­வி­மான நிலை­யத்­திற்­குச் செல்ல வேண்­டாம் என்று அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­கள் தங்­க­ளது குடி­மக்­களை எச்­ச­ரித்­துள்­ளன.

ஆப்­கா­னிஸ்­தான் தலி­பான்­வ­ச­மா­கி­விட்டதால், அதன் ஆட்­சிப்­ பி­டி­யி­லி­ருந்து தப்­பிக்க விரும்பி, பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆப்­கா­னி­யர்­கள் காபூல் விமான நிலை­யத்தை முற்­று­கை­யிட்­டுள்­ள­னர்.

அவ்விமான நிலையத்திலிருந்து இது­வரை 82,000க்கும் மேற்­பட்­டோர் விமா­னங்­கள் மூலமாக மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

இம்­மா­தம் 31ஆம் தேதி காலக்­கெடு விதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அதற்­குள் தங்­க­ளது குடி­மக்­களை அங்­கி­ருந்து பாது­காப்­பாக மீட்­கும் நட­வ­டிக்­கை­களை பல நாடு­களும் விரை­வு­ப­டுத்­தி­யுள்­ளன.

ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­தக்­கூ­டும் என்று எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டபோதும் நேற்­றும் காபூல் விமான நிலைய நுழை­வா­யில்­க­ளின்­முன் ஏரா­ள­மானோர் திரண்­டி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அமெ­ரிக்­கா­வும் அதன் நட்பு நாடு­களும் இரா­ணுவ விமா­னங்­கள் மூல­மாக நாள்­தோ­றும் ஆயி­ரக்­கணக்­கான ஆப்­கா­னி­யர்­க­ளைக் காபூல் விமான நிலை­யத்­தில் இருந்து வெளி­யேற்றி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், ஆப்­கா­னில் செயல்படும் ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்பின் அச்­சு­றுத்­தல் காரணமாக, விமா­னங்­கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் விரை­வில் முடி­விற்கு வர­லாம் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

கிட்­டத்­தட்ட 1,500 அமெ­ரிக்­கர்­கள் இன்­னும் ஆப்­கா­னில் இருக்­க­லாம் என்­றும் அவர்­க­ளைக் கண்­ட­றிய விரி­வான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றோம் என்று அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆன்­டனி பிளிங்­கன் கூறி­னார்.

இப்­போது அமெ­ரிக்­க வீரர்கள் 5,800 பேரும் பிரிட்­டிஷ் படை­யி­னர் 1,000 பேரும் காபூல் விமான நிலை­யத்­தைத் தற்­காத்து வரு­வ­தாக பிபிசி செய்தி குறிப்­பிட்டுள்­ளது.

இத­னி­டையே, அந்த விமான நிலை­யத்­திற்கு வெளியே உள்ள பொது­மக்­க­ளைப் பாது­காக்­கும் பணியை தமது படை­யி­னர் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­வதாக தலி­பான் தரப்­பைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

"எங்­க­ளுக்­கும் ஐஎஸ் அமைப்­பின் அச்­சு­றுத்­தல் இருக்­கிறது. எங்­க­ளது படை­யி­ன­ரும் உயி­ருக்கு ஆபத்­தான சூழ­லில்­தான் காபூல் விமான நிலை­யத்­தில் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்," என்று அவர் சொன்­னார்.