ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபுலின் விமான நிலையத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 13 அமெரிக்க துருப்பினர் உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடி தரப்போவதாக அதிபர் ஜோ பைடன் சூளுரைத்திருக்கிறார். அந்த விமான நிலையத்தில் நேர்ந்த இரண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கப்பேவாதாகவும் அவர்களின் மீதான தாக்குதலைத் திட்டமிட பெண்டகோனிடம் கேட்டிருப்பதாகவும் திரு பைடன் கூறினார்.
'ஐசிஸ்-கே' என்ற பயங்கரவாதக் குழு, இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. அமெரிக்க ராணுவத்தினருடன் பணியாற்றிய மொழிபெயர்ப்பாளர்களையும் பங்காளிகளையும் குறிவைத்திருப்பதாக அந்தக் குழு கூறியது. தலிபான் அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் எதிரியாக இருக்கிறது ஐ.எஸ். "நாங்கள் மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம். நாங்கள் உங்களைக் கண்டுபிடித்து உங்களை பதில் சொல்ல வைப்போம்," என்று திரு பைடன், தாக்குதலை நடத்தியோரைப் பற்றி தமது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார். பயங்கரவாதிகளால் அமெரிக்கா பின்வாங்காது என்றும் அமெரிக்காவின் பணி தொடரும் என்றும் திரு பைடன் கூறினார்.
கடந்த 12 நாட்களாக மேற்கத்திய நாடுகள் சுமார் 10,000 பேரை வெளியேற்றியுள்ளது. ஆயினும், ஆயிரக்கணக்கானோர் விட்டுவிடப்படுவர் என்பதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற திரு பைடன் உத்தரவிட்டார்.
ஆப்கானிய அரசாங்கத்தின் கவிழ்ப்பு, அமெரிக்க அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆயினும், துருப்புகளை மீட்டுக்கொண்ட முடிவை திரு பைடன் தொடர்ந்து தற்காத்து வருகிறார். 1999 ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் நிரந்தரமாக இருக்க முடியாது என்று திரு பைடன் வலியுறுத்தினார்.

