காபூல் பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்க அதிபர் சூளுரை
காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் 13 அெமரிக்க வீரர்கள் உட்பட 85 பேர் கொல்லப்பட்டதால் கவலையும் கோபமும் அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பழிக்குப் பழி வாங்கப்படும் என்று சூளுரைத்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தேடி வேட்டையாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காபூல் விமான நிலையத்துக்கு அருகே இரட்டை குண்டுவெடிப்பு நடந்த அடுத்த சில மணி நேரங்களில் வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது முகம் சிவந்திருந்தது, கோபம் கொப்பளித்தது, நா தழுதழுத்தது. எப்படியும் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற உறுதி தென்பட்டது.
"அமெரிக்காவுக்குத் தீங்கிழைப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்," என்று திரு பைடன் சொன்னார்.
2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பேசிய அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், மறக்க மாட்டோம், நாங்கள் உங்களை வேட்டையாடுவோம், அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறியிருந்தார். அதிபர் பைடனின் பேச்சும் அதைப்போலவே எச்சரித்தது.
சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்காவுடன் போரிட்ட ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு ஒத்துழைத்தவர்களையும் மொழி பெயர்ப்பாளர்களையும் இரு தற்கொலையாளிகளில் ஒருவர் குறி வைத்ததாக அந்த அமைப்பு கூறியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளையும் வெளி நாட்டவர்களையும் வெளியேற்றும் பணி தொடரும் என்று அதிபர் பைடன் உறுதியளித்துள்ளார்.
"பயங்கரவாதிகளால் எங்களுடையப் பணியை தடுத்து நிறுத்த முடியாது. வெளியேற்றும் பணி தொடரும்," என்றார் அவர்.
தலிபான் படையைச் சேர்ந்த 28 உறுப்பினர்கள் உட்பட இறந்தவர் களின் எண்ணிக்கை 72க்கு அதி கரித்துள்ளதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 150 பேர் காயம் அடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதில் உயிரிழந்த அமெரிக்க படையினரை, மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் தன்னலமற்ற பணியில் ஈடுபட்ட மாவீரர்கள் என்று அதிபர் பைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு கூடுதல் படைகள் தேவைப்பட்டால் உடனடியாக அனுப்பி வைக்கவும் அெமரிக்கா தயாராக உள்ளது.

