தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் அமைந்துள்ள புதிய ஆறு ரயில் நிலையங்கள் இன்று பொதுமக்களுக்குத் திறக்கப்படுகின்றன.
ஸ்பிரிங்லீஃப், லெண்டோர், மேஃபிளவர், பிரைட் ஹில், அப்பர் தாம்சன், கால்டிகோட் ஆகிய ஆறு நிலையங்கள் 2வது கட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் அமைந்துள்ளன.
இப்பாதையில் உள்ள ரயில்கள் உச்ச நேரத்தில் ஐந்து நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் ஒன்பது நிமிட இடைவெளி யிலும் சேவையாற்றும்.
பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ரயில்களின் நேரம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூரின் மற்ற பாதைகளில் உள்ள ரயில்கள் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலான உச்சநேரத்தில் இரண்டு முதல் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை சேவையாற்றுகின்றன. இதுவே உச்சநேரமில்லாத சமயங்களில் ஐந்து முதல் ஏழு நிமிட இடைவெளியில் ரயில்கள் செயல்படுகின்றன.
புதிய 2வது கட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் இரண்டு சந்திப்புகள் இடம்பெற்று உள்ளன.
கால்டிகோட் ரயில் நிலையம், வட்டப் பாதையுடன் இணைக்கப் பட்டுள்ளது. பிரைட் ஹில் ரயில் நிலையம், எதிர்கால குறுக்குத் தீவு ரயில் பாதையுடன் இணைக்கப்படும்.
நேற்றுக் காலை 2வது கட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
அப்போது, ரயில் கட்டுமானப் பணிகளால் ஏற்பட்ட அசெளகரியங்களைப் பொறுத்துக்கொண்ட குடிமக்களுக்கும் கடைக்காரர் களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
புதிய ரயில் பாதையால் பொதுப்போக்குவரத்து மீதான ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மேலும் அதிகரிக்கும் என்று கூறிய அமைச்சர், பொதுப்போக்கு வரத்தின் மேம்பட்ட வசதியால் சிங்கப்பூரர்கள் பலனடைவார்கள் என்றார்.
இதே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், நிலையங் களுக்கு அருகில் அைமந்துள்ள உணவகங்களை சுட்டிக்காட்டி இப்பாதை 'உணவுத் தாழ்வாரம்'ஆகத் திகழும் என்றார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் 2வது கட்ட ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டின் 2ஆம் பாதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொள்ளைநோய் காரணமாக காலதாமதமானது.
முதல் கட்ட, 2வது கட்ட ரயில் பாதை மட்டும் சுமார் 100,000 குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சர் ஈஸ்வரன் சொன்னார்.

