சொந்த வீடுகளும் இருக்கும் ஒருங்கிணைந்த குடியிருப்புகளாகக் கட்டப்படுகின்றன
வாடகை வீடுகளும் சொந்த வீடுகளும் கலந்து இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த பல வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இப்போது ஏறக்குறைய 1,300 பொது வாடகை வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அப்பணிகள் 2025ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக முடிவடையும் என்றும் இணைப் பேராசிரியர் ஃபைஷல், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது கூறினார்.
அவ்வீடுகளில் சில, காலாங்/வாம்போ, பாசிர் ரிஸ், செங்காங் ஆகிய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் மூன்று வீவக திட்டங்களில் நான்கு ஒருங்கிணைந்த குடியிருப்புகளில் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இப்போது புக்கிட் பாத்தோக்கிலும் உட்லண்ட்சிலும் அத்தகைய ஒருங்கிணைந்த இரு குடியிருப்புகள் உள்ளன.
2020 நிலவரப்படி, ஏறத்தாழ 62,000 வாடகை வீடுகள் உள்ளன. அவை அனைத்திலும் குடி இருக்காவிடினும், பொது வாடகை வீடுகளைத் தொடர்ந்து அதிகரிப்பதற்கான தேவை இருப்பதாக பேராசிரியர் ஃபைஷல் கூறினார்.
"வாடகை வீடுகளைக் கட்டுவதை அதிகப்படுத்தி வருகிறோம். அதற்கு, வாடகை வீடுகளும் சொந்த வீடுகளும் கலந்து இருக்கும் ஒருங்கிணைந்த வீவக குடியிருப்புகளை அமைக்கும் முறையைக் கையாண்டு வருகிறோம்," என்றார் அவர்.
இது சவாலானது என்றாலும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்த இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கட்டுப்படியாதல், அனைவரையும் உள்ளடக்குதல், எளிதில் வாங்க முடிதல் ஆகிய மூன்றையும் சிங்கப்பூரின் பொது வீடமைப்புக் கொள்கையின் சிறப்பம்சங்களாக பேராசிரியர் ஃபைஷல் குறிப்பிட்டார்.
அதனால்தான், கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரன்ட் போன்ற முக்கியப் பகுதிகளில் வாடகை வீடுகளைக் கட்டும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்து இருப்பதாக அவர் சுட்டினார்.
"அங்கு அமையும் வசதிகள் பல்வேறு தரப்பினரின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதை உறுதிப்படுத்துவோம்," என்றார் துணை அமைச்சர் ஃபைஷல்.
இருப்பினும், தங்களது வாழ்க்கைத்தொழில், குடும்பம், நிதித் திட்டமிடல் சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய கூடுதல் காலம் தேவைப்படும் குடும்பங்களுக்கான தற்காலிகக் குடியிருப்புகளாக வாடகை வீடுகள் விளங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எதார்த்தமான, நீடித்து நிலைக்கத்தக்க வழியில், முடிந்த அளவிற்குப் பல குடும்பங்களை வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு மாற ஆதரவு அளிப்பதே குறிக்கோள் என்று திரு ஃபைஷல் குறிப்பிட்டார்.
கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள், மானியங்கள் மூலமாக கிட்டத்தட்ட 4,600 குடும்பங்கள் வாடகை வீட்டில் இருந்து சொந்தமாக வீவக வீடு வாங்கிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

