இந்தியாவில் கிட்டத்தட்ட இரு மாதங்களில் இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,759 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது; 509 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மொத்த பாதிப்பு கிட்டத்தட்ட 32.7 மில்லியனாகவும் உயிரிழப்பு 437,370ஆகவும் உயர்ந்தது.
ஆக அதிகமாக, கேரள மாநிலத்தில் மேலும் 32,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், பெரிய அளவிலான ஒன்றுகூடல்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளும்படி எல்லா மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
பத்து மில்லியன் பேர்க்குத் தடுப்பூசி
இதனிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பத்து மில்லியன் பேர்க்குமேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "ஒரே நாளில் ஒரு கோடி பேர்க்குமேல் தடுப்பூசி போட்டது குறிப்பிடத்தக்க சாதனை," என்று மெச்சினார்.
ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் இதுவரை 628 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதைத் தாண்டியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி போட இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

