ஈ-பாஸ், எஸ்-பாஸ் தகுதி அடிப்படை படிப்படியாக கெடுபிடியாக்கப்படும்

ஈ-பாஸ், எஸ்-பாஸ் தகுதி அடிப்படை படிப்படியாக கெடுபிடியாக்கப்படும்

3 mins read
ca4d8171-4b5b-4213-8136-36a9367c7361
-
Google News Preferred Icon

வேலைக்கான போட்டி, எம்ப்ளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் ஊழியர்களின் தரம் ஆகியவற்றில் சிங்கப்பூரர்களுக்கு நிலவும் கவலைகளைப் போக்கும் வண்ணம் இனிவரும் காலங்களில் எம்ப்ளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் ஆகியவற்றுக்கான விதிமுறைகள் தொடர்ந்து கெடுபிடியாக்கப்படும்.

மேலும், வேலை இடத்தில் அனைத்து ஊழியர்களும் நியாயமாக நடத்தப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளிக்கப்படும் அதே சமயம் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் உள்ளூர் சமூகக் கூறுகள், வழமைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல சிங்கப்பூரர்களும் தங்களைப்போல் இல்லாதவர்களுடன் இணைந்த வாழவும் அவர்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

பிரதமர் லீ சியன் லூங் இன்று (ஆகஸ்ட் 29) ஆற்றிய தமது தேசிய தினப் பேரணி உரையில் இவற்றைக் கூறினார்.

''குறைந்த வருமான ஊழியர்கள் மட்டும் தங்கள் வேலைகளை எண்ணி கவலைப்படுவதில்லை. நடுத்தர வருமான குடும்பங்களும் இந்த நெருக்கடியை உணர்கின்றன. வெளிநாட்டவர் குறித்து குறிப்பாக வொர்க் பாஸ் எனும் வேலை அனுமதிச் சீட்டில் இருப்பவர்களை எண்ணி அமைதியற்ற நிலை அதிகரிப்பதை நாம் காண்கிறோம். கொவிட்-19 தொற்றுக்கு முன்னரே இந்த நிலை நிலவியது ஆனால் பொருளியல் நிலையின்மை இதனை அதிகரித்துள்ளது,'' என்று பிரதமர் லீ சுட்டினார்.

வேலை அனுமதிச் சீட்டில் உள்ளவர்கள் நமது ஊழியரணியை வலுப்படுத்தி பொருளியலை வளர்க்க இங்கு வருகிறார்கள் என்ற திரு லீ, நல்ல காலத்தில் இது முதலீட்டை ஈர்க்கிறது, இது உள்ளூர்வாசிகளுக்கு வேலைகளை உருவாக்குகிறது. மோசமான காலத்தில், உதாரணத்திற்கு கடந்த ஆண்டைப் பார்க்கும்போது வெளிநாட்டு ஊழியரணி சுருங்கியபோது உள்ளூர்வாசிகள் வேலை இழப்பதைத் தவிர்க்க உதவும் கேடயமாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.

பல சிங்கப்பூரர்கள் இந்த பொருளியல் வாதங்களைப் புரிந்துகொண்டாலும் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல் சார்ந்த உணர்வுபூர்வமான வாதங்களும் நிலவுகின்றன. வேலையிடத்தில் வேலைகள், வேலை வாய்ப்புகளுக்கான போட்டி என வரும்போது பல கேள்விகள் எழுவது நியாயம்தான் என்றார் பிரதமர்.

''எனக்கு பதில் எனது முதலாளி வேலை அனுமதிச் சீட்டில் வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்துகிறாரா? பதவி உயர்வு என வரும்போது நான் நியாயமாக நடத்தப்படுகிறேனா? இன்னும் பெரிய பொறுப்புகளை ஏற்க எனக்குப் பயிற்சி அளித்து தயார்ப்படுத்துகிறாரா? போன்ற நியாயமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டும்,'' என்றார் அவர்.

முதலில் எம்ப்ளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் வேலை அனுமதியில் இங்கு வரும் ஊழியர்கள் சரியான தரத்தில் இருப்பதைச் சிங்கப்பூரர்களுக்கு உறுதி அளிக்கவேண்டும். வேலை அனுமதியில் பணிபுரிவோருக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு அவர்களது தரம் ஒரு நியாயமான அளவுகோலாக அமைகிறது. அதனால்தான் வேலை அனுமதிக்குத் தகுதிபெற குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. சிங்கப்பூரர்களின் ஊதியம் உயர உயர, இந்தச் சம்பளத் தகுதிநிலையும் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இருமுறை இந்தச் சம்பளத் தகுதிநிலை உயர்த்தப்பட்டது.

எம்ப்ளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் வேலை அனுமதிக்குத் தகுதிபெறும் விதிமுறைகள் தொடர்ந்து கெடுபிடியாக்கப்படும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார். எனினும், அதிகப்படியான மாற்றத்தை உடனடியாக செய்தால் அது வர்த்தகங்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் அது படிப்படியாகச் செய்யப்படும்.

மேலும், சிங்கப்பூரர்கள் தகுதிபெறும், சிங்கப்பூரர்கள் வேலை செய்ய தயாராக இருக்கும் வேலைகளுக்கு, நமது கொள்ளளவுக்கு மேல் வேலை அனுமதியில் ஊழியர்கள் கொண்டுவரப்படமாட்டார்கள் என்றும் திரு லீ விவரித்தார்.

இரண்டாவதாக, வேலை இடங்களில் அனைத்து ஊழியர்களும் நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று திரு லீ சொன்னார்.

''தகவல் தொழில்நுட்பம், நிதி ஆகிய துறைகளில் அதிகமான வெளிநாட்டவர்கள் பணிபுரிகிறார்கள் எனும் புகாரை நாம் அடிக்கடி கேட்கிறோம். இந்த இரு துறைகளிலும் வேலை அனுமதியில் உள்ள பலர் பணிபுரிகிறார்கள். இதற்கு நாம் ஒரு வர்த்தக மையமாக இருப்பதே காரணம். இங்குள்ள நிதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வட்டார, உலக அளவில் செயல்படுகின்றன. அதற்கு உள்ளூர் திறனாளர்களும் வெளிநாட்டுத் திறனாளர்களும் தேவை. மேலும் இத்துறைகளில் திறனாளர்களின் தேவை அதிகமாக உள்ளது.

''ஆனால் இந்த நிறுவனங்கள் பல சிங்கப்பூரர்களையும் வேலையில் அமர்த்தியுள்ளனர், அவர்களில் திறன் உள்ள பலருக்குப் பயிற்சி அளித்து மூத்த, அனைத்துலகப் பொறுப்புகளையும் வழங்கியுள்ளன. வேலை அனுமதியில் ஊழியர்களை இங்கு கொண்டுவர நாம் அனுமதி அளிக்கவில்லை என்றால் பல நிறுவனங்கள் இங்கு வந்திருக்க மாட்டா, பல சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்புகளும் கிடைத்திருக்காது,'' என்றார் திரு லீ.