சிங்கப்பூரில் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வேலை பார்க்கும் முஸ்லிம் தாதியர், வரும் நவம்பர் முதல் தங்களுடைய சீருடையுடன் தலையங்கியை, அவர்கள் விரும்பினால் அணிந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி ஆங்கில உரையில் இதனை அறிவித்தார்.
இந்த நடைமுறையை அமல்படுத்த சிங்கப்பூர் ஆயத்தமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
இப்போது சீருடை தேவைப்படும் சில வேலையிடங்களில் தலையங்கியை அணிந்துகொள்ள அரசாங்கம் அனுமதிப்பதில்லை.
இதன் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலையைப் பொதுவாக முஸ்லிம் சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு இருப்பதாகத் திரு லீ கூறினார்.
இனம், சமயம் பற்றிய கொள்கைகள் அப்போதைக்கு அப்போது சரிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, தலையங்கியை அணிவதன் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை தான் ஏற்றுக்கொள்வதாக திரு லீ குறிப்பிட்டார்.
அது பல முஸ்லிம் மாதர்களின் சமய நம்பிக்கையின் முக்கிய அங்கமாக ஆகி இருக்கிறது என்றார் திரு லீ.

