படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவாக்கத்தின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பலன் அடைவர்
சிங்கப்பூரில் குறைந்த வருமான ஊழியர்களுக்கான சம்பள உயர்வு முயற்சிகளை அரசாங்கம் இரண்டு மடங்காக்குகிறது. இதன் விளைவாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஏறக்குறைய எல்லா உள்ளூர் ஊழியர்களும் குறைந்தபட்ச மாதச் சம்பளமாக $1,400ஐ ஈட்டுவர்.
வாகன ஓட்டுநர்கள், நிர்வாக உதவியாளர்கள் போன்ற வழிவழியாகவே குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்கள் அதிக சம்பளத்தைப் பெறுவார்கள்.
தற்போது நடப்பில் உள்ள படிப்படியான சம்பள உயர்வு முறை, மேலும் பல துறைகளை உள்ளடக்கி விரிவுபடுத்தப்படுகிறது. இதன் வழியாக அத்தகைய ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்.
அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் ஆகிய தரப்புகளின் பிரமுகர்களைக் கொண்ட தேசிய பணிக்குழு முன்வைத்த யோசனைகளில் இந்த நடவடிக்கைகள் உள்ளடங்கும்.
அந்தப் பணிக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் பற்றி பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார்.
அதற்கு அடுத்த நாளான நேற்று அந்தப் பணிக்குழுவின் 18 பரிந்துரைகளும் வெளியிடப்பட்டன. அவை அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இப்போதைய படிப்படியான சம்பள உயர்வு அணுகுமுறையை விரிவுபடுத்துவதன் மூலம், ஆகக் குறைந்த வருமானம் ஈட்டுவோரின் ஊதியத்தை அதிகரிக்கச் செய்வதே பணிக்குழு உத்தியின் முக்கிய அங்கமாகும்.
தற்போது துப்புரவு, பாதுகாப்பு, நில வனப்பு ஆகிய துறைகளில் படிப்படியான சம்பள உயர்வு முறை நடைமுறையாக்கப்பட்டுள்ளது.
முழுநேரமாக வேலை பார்க்கும் 283,000 குறைந்த வருமான ஊழியர்களில் ஏறத்தாழ 10 விழுக்காட்டினர் இந்தத் துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
படிப்படியான சம்பள உயர்வு முறையை, மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்துவதில் இந்தப் பணிக்குழு கவனம் செலுத்தி வருகிறது.
எத்துறை ஆயினும், வாகன ஓட்டுநர்கள், நிர்வாக உதவியாளர்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் படிப்படியான சம்பள உயர்வு முறை ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தக் குழு உத்தேசித்து உள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது குறைந்த வருமான ஊழியர்களில் மேலும் 37 விழுக்காட்டினர் பலனடைவர்.
இது ஒருபுறம் இருக்க, உள்ளூர் ஊழியருக்கான குறைந்தபட்ச சம்பள ஏற்பாட்டு முறையும் சரிசெய்யப்படுகிறது.
நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்த விரும்பினால் தங்கள் உள்ளூர் ஊழியர்களில் சிலருக்காவது மாதம் குறைந்தபட்சம் $1,400 சம்பளம் தரவேண்டும் என்பதை இந்த ஏற்பாடு இப்போது கட்டாயமாக்குகிறது.
இந்த ஏற்பாட்டை இத்தகைய நிறுவனங்களில் வேலை பார்க்கும் எல்லா உள்ளூர் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தும்போது, அது படிப்படியான சம்பள உயர்வு முறைக்கு உறுதுணையாக இருந்து ஒரு புதிய அணுகுமுறையாகத் திகழும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணிக்குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் 2023 மார்ச் 1 வரை கட்டம் கட்டமாக நடப்புக்கு வரும். அவை சிங்கப்பூரில் வேலை பார்க்கும் குறைந்த வருமான ஊழியர்களில் 94 விழுக்காட்டினரின் மாதாந்திர சம்பளம் உயர வழிவகுக்கும்.
குறைந்த வருமான ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழுத் தலைவரான மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, கடந்த சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பணிக்குழுவின் அறிக்கையை வெளியிட்டார். ஒருமைப்பாடு, சுறுசுறுப்பு ஆகியவற்றின் மூலம் குறைந்த வருமான ஊழியர்களும் முன்னேற்றம் காணலாம் என்றும் பணிக்குழுவின் பரிந்துரைகளால் தற்போதைய முயற்சிகள் இன்னும் மேம்பட்ட நிலையை அடைந்துள்ளன என்றும் திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

