பாராலிம்பிக் எனப்படும் உடற்குறை உள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் நீச்சல் வீரங்கனை யிப் பின் சியு இரண்டாவது தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
தோக்கியோ அக்குவாட்டிக்ஸ் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் மல்லாந்து நீச்சல் எஸ்2 போட்டியில் யிப் முதலாவதாக வந்தார்.
50 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 2.04 வினாடிகளில் அவர் நீந்திக் கடந்தார்.
கடந்த வாரம் பெண்களுக்கான எஸ்2 பிரிவில் 100 மீட்டர் மல்லாந்து நீச்சலிலும் இவர் தங்கம் வென்றார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்கிலும் இரு போட்டிகளில் தங்கம் வென்றிருந்த இவர், அந்த இரு வெற்றிகளையும் இப்போது தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மேலும் இவ்விரு நீச்சல் போட்டிகளுக்கான உலக சாதனை இந்த 29 வயது வீராங்கனை வசமே உள்ளன.
நேற்றைய போட்டியில் ஜப்பான் வீரங்கனை மியுக்கி யமடா வெள்ளியும் சீனாவின் ஃபெங் யாஸு வெண்கலத்தையும் வென்றனர்.
முன்னதாக, நேற்றுக் காலைதான் திருவாட்டி யிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார். 1 நிமிடம் 3.61 விநாடிகள் விரைவாக நீந்தி உலகின் ஒன்பது நீச்சல் வீராங்கனைகளைப் பின்னுக்குத் தள்ளி அவர் முன்னேறினார்.