நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்தால் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும்

1 mins read
9dcfd934-cc80-4390-86c6-63d041be8627
படம்: சாவ் பாவ் -

குறைந்தது பத்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள், ஊழியர் ஒருவரை ஆட்குறைப்பு செய்தால் மனிதவள அமைச்சிடம் அதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய விதிமுறைகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன.

ஊழியரை ஆட்குறைப்பு செய்ததும் ஐந்து வேலை நாட்களுக்குள் மனிதவள அமைச்சிடம் நிறுவனங்கள் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தப் புதிய விதிமுறை வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

தற்போதைய நடைமுறையின்கீழ் ஆறு மாதத்துக்குள் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தால் மட்டுமே மனிதவள அமைச்சிடம் முதலாளிகள் தெரிவிக்க வேண்டும்.

"பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்புகொண்டு அவருக்குத் தேவையான ஆதரவை வழங்க முத்தரப்புப் பங்காளிகள், சிங்கப்பூர் ஊழியரணி, வேலை நியமனம் மற்றும் வேலை வாய்ப்புக் கழகம், இதர அமைப்புகள் ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள விதிமுறை உதவும்," என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

வேலை இழந்த ஊழியர்களுக்குப் பயிலரங்குகள், வாழ்க்கைத் தொழில் பற்றிய வழிகாட்டுதல், கட்டமைப்புகள், வேலைச் சந்தைகள், அவர்களுக்குப் பொறுத்தமான வேலையில் சேர்த்துவிடுவது, சிபாரிசுகள் போன்ற ஆதரவு வழங்கப்படும்.

ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் நிதிச் சுமையை சுமப்பதுடன் கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளாவதாக குறிப்பிட்ட மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன், அவர்களுக்கு உதவி செய்ய கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்