தொடக்கநிலை ஒன்று பதிவில் புது விதிகள்

தொடக்கநிலை ஒன்று பதிவில் புது விதிகள்

2 mins read

முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் தொடக்­க­நிலை ஒன்­றுக்­காக முன்­ப­தி­வு­செய்­யத் தகு­தி­பெ­றாத மாண­வர்­க­ளுக்­காக அடுத்த ஆண்­டு­முதல் மேலும் அதி­க­மான இடங்­கள் ஒதுக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

தங்­கள் வீட்­டுக்கு அரு­கி­லுள்ள பள்­ளி­யில் மாணவருக்கு இடம் கிடைக்­கும் வாய்ப்பை இம்மாற்­றம் உறு­திப்­படுத்­தும் என்று கூறப்­ப­டு­கிறது. இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­ன­ருக்­காக ஒதுக்­கப்­படும் இடங்­கள் இனி இரட்­டிப்பாகி 40 ஆக்­கப்­படும்.

இப்­போது இப்­பி­ரி­வி­னர் முன்­பதி­வின் '2சி' கட்­டத்­துக்­குத் தகுதி­பெ­று­கின்­ற­னர். பள்­ளி­யு­டன் எவ்­வி­தத் தொடர்பும் அல்­லா­த­வ­ருக்­கும்; பள்­ளிக்­கும் வீட்­டுக்­கும் உள்ள தொலை­வைக் கொண்­டும் பள்­ளி­யில் இந்த '2சி' கட்­டம் இட­மளிக் கிறது. இக்­கட்­டத்­திற்­காக 2014ஆம் ஆண்­டு­ மு­தல் 20 இடங்­களை கல்வி அமைச்சு ஒதுக்­கத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து போட்டி அதி­க­ரித்து­விட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது.

இவ்­வாண்டு '2சி' கட்­டத்­தின்­கீழ் குலுக்­கல் முறை­யில் இடங்­களை ஒதுக்­கும் நிலை, மூன்­றில் ஒரு பள்­ளிக்கு நேர்ந்­தது. 2014ல் நான்­கில் ஒரு பள்­ளிக்கு இந்த நிலை ஏற்­பட்­டது.

புதி­தாக செய்­யப்­படும் இந்த மாற்­றத்­தால் அனை­வ­ருக்­கும் ஏற்­பு­டைய, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வகை­யில் பள்­ளி­கள் இருப்­பது உறு­தி­செய்­யப்­படும் என்­று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறினார்.

பிள்­ளை­க­ளின் கல்வி தொடர்­பான ஆர்­வத்­தைக் கருத்­தில் கொண்டு '2சி' கட்­டத்­தின்­கீழ் கூடு­தல் இடங்­கள் ஒதுக்­கப்­ப­டு­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது. பய­ணத்­திற்­குக் குறை­வான நேரத்தை செல­வி­டு­வ­து­டன் தாங்­கள் ஆர்­வம் கொண்ட மற்ற அம்­சங்­களில் கவனம் செலுத்­த மாணவர்களுக்குக் கூடு­தல் நேரம் கிடைக்­கும் என்­றும் குடும்­பத்­தி­ன­ருக்கு இது வச­தி­யாக இருக்­கும் என்­றும் அமைச்சு விளக்­கி­யது.

இதற்­கி­டையே, '2பி' கட்­டத்­தின்­கீழ் தொடர்ந்து 20 இடங்­கள் ஒதுக்­கப்­படும். பெற்­றோர் தொண்­டூ­ழி­யர்­கள், குல­ம­ர­புச் சங்­கங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் ஆகி­யோ­ரின் பிள்­ளை­க­ளுக்கு இந்­தக் கட்டத்தின் கீழ் இடம் ஒதுக்­கப்­ப­டு­கிறது என்­றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்­னாள் மாண­வர்­க­ளின்

பிள்­ளை­க­ளுக்கு ஒரே கட்­டம்

'2சி' கட்­டத்­துக்­காக கூடு­தல் இடங்­கள் ஒதுக்­கப்­ப­டு­வ­தால் பல பள்­ளி­களில் '2ஏ (2)' கட்­டத்­தின்­கீழ் இடங்­கள் இல்­லா­மல் போக­லாம் என்றது கல்வி அமைச்சு. பெற்­றோர் அல்­லது சகோ­த­ரர்­கள் முன்­னாள் மாண­வ­ராக இருந்­தி­ருந்­தால் '2ஏ (2)' கட்­டத்­தின்­கீழ் பிள்­ளைக்­கான இடத்­துக்கு விண்­ணப்­பிக்­கத் தகு­தி ­பெ­று­வர். இனி '2ஏ (1)' மற்­றும் '2ஏ (2)' கட்­டங்­களை இணைப்­ப­தாக அமைச்சு முடி­வெ­டுத்­துள்­ளது.

பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர் சங்­கத்­தில் அல்­லது பள்­ளி­யின் ஆலோ­சனை, நிர்­வா­கக் குழு­வில் இடம்­பெ­று­வோர், தங்­க­ளின் பிள்ளைக்­காக விண்­ணப்­பிக்­கத் தகு­தி­பெ­றும் கட்­ட­மாக '2ஏ1' இருந்­தது. இரண்டு கட்­டங்­க­ளை­யும் இணைப்­ப­தால், இரு தரப்­பி­ன­ரும் இனி ஒரே கட்­டத்­தின்­கீழ் இடத்­துக்­காக போட்­டி­யி­டு­வர்.

கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி­களில் பயி­லும் பிள்­ளை­கள், '2ஏ (2)' கட்­டத்­தின்­கீழ் தகு­தி­பெ­றும் நிலை­யில், இந்த மாற்­றத்­தால் அவர்­களுக்கு முன்­னு­ரிமை கிடைக்கும்.

இவ்­வாண்டு மார்ச் மாதத்­தில் கல்வி அமைச்­ச­ராக இருந்த லாரன்ஸ் வோங், தொடக்­க­நிலை ஒன்­றுக்­கான பதி­வு­முறை குறித்து மறு­ஆய்வு செய்­யப்­படும் என்று நாடா­ளு­மன்­றத்­தில் அறிவித்தார்.