சிண்டா உன்னத விருதின் முப்பது ஆண்டு வரலாற்றில் ஆக அதிக எண்ணிக்கையாக 749 மாணவர்களும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளும் நேற்று விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டனர்.
கல்வி, விளையாட்டு, கலைகள் என பல தளங்களில் உன்னதத் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் வரை பல்வேறு மாணவர்கள் விருது பெற்றனர்.
அவர்களுக்கு $150 முதல் $500 வரை பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
வெவ்வேறு பிரிவுகளில் ஆக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இந்த ஆண்டு தகுதிபெற்றனர். கடந்த ஐந்தாண்டு களில் ஆக அதிகமாக தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 123 மாணவர்கள் விருது பெற்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 32% அதிகம்.
அனைத்துலக 'பக்கலாரெட்' பிரிவிலும் சிங்கப்பூர் பள்ளிகள் விளையாட்டு மன்ற 'கலர்ஸ்' விருது மற்றும் உயர்கல்வி விளை யாட்டுப் பிரிவிலும் இரண்டு மடங்கிற்கு அதிகமான மாணவர்கள் விருது பெற்றனர்.
கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதை இதுவரை 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
விழாவில் கலந்துகொண்டு பேசிய சிண்டாவின் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா, இந்திய சமூகத்தின் கல்வித் தேர்ச்சி உயர்ந்து வருவதைச் சுட்டினார்.
ஒரு சமூகமாக கல்வி மீது பல ஆண்டுகள் மேற்கொள்ளப் பட்ட முயற்சிகளின் பலன் இது என்றார் அவர்.
சமூகத்தின் கல்வித் தேர்ச்சியை உயர்த்தும் நோக்கத்தில் சிண்டா உந்துதல் வழங்கும் அதேவேளை அந்த அமைப்புடன் சேர்ந்து பணியாற்றும் பள்ளிகள், ஆசிரியர்கள், சமூகப் பங்காளிகள், தொண்டூழியர்கள், பெற்றோர்கள், குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
"சவால்மிகுந்த கடந்த ஈராண்டுகளில் நீங்கள் செய்த அர்ப்பணிப்பும் உங்களின் மீள்திறனும்தான் இந்தத் தேர்ச்சிக்கு அடித்தளம் இட்டுள்ளது," என விருது பெற்றவர்களிடம் குமாரி இந்திராணி கூறினார்.
டெசன்சன் சாலை சிவில் சர்வீஸ் கிளப் அரங்கத்தில் நேற்று சிண்டா அறங்காவலர் குழுவின் தலைவரும் மூத்த அமைச்சரு மான தர்மன் சண்முகரத்னம், உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட 50 பேர் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விருது வழங்கப்பட்ட 19 பிரிவுகளைப் பிரதிநிதித்து தலா ஒரு மாணவர் நேரில் விருதைப் பெற்றார். 700க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியை மெய்நிகர் வழி கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் எட்வின் டோங், "ஒருங்கிணைந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொருவரும் அத்தியாவசிய வழிகளில் பங்காற்றுவது அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
"அந்தப் பயணத்தில் அரசாங்கமும் சமூகமும் உங்களுக்கு ஆதரவு தரும்," என்று உறுதியளித்ததோடு புதிய அம்சங்களில் மேம்பாடு காண இளையர்களை ஊக்குவித்தார்.
சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் பேசுகையில், சிறப்புத் தேர்ச்சிபெறும் இலக்கை நோக்கிய பயணத்தில் ஆற்றல், திறன், முயற்சிகளை சமூகத்தின் மேம்பாட்டிற்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் செலுத்துமாறு எல்லா மாணவர்களையும் கேட்டுக்கொண்டார்.
உன்னதத் தேர்ச்சிபெற்ற 749 பேருக்கு சிண்டா கௌரவம்

