முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்குச் செல்வதற்கு நாளை முதல் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை. கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என்று சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
முதியோர் இல்லத்தில் இருக்கும் பணியாளர்களுக்கும் இல்லவாசிகளுக்கும் இடையே கொவிட்-19தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11 ஆம் தேதி வரையிலான இந்தத் தடை, தடுப்பூசி போடாத முதியவர்களுக்கு தடுப்பூசி போவதற்கான அவகாசத்தைத் தரும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
"முதியோர் இல்லங்களின் பணியாளர்களுக்கும் இல்லவாசிகளுக்குமான சோதனை முறையை மேலும் கடுமையாக்குவோம். ஆன்டிஜென் விரைவு சோதனை முறையை கூடுதலாக செய்து, தற்போதைய கண்காணிப்பை வலுப்படுத்துவோம்," என்று மனிதவள அமைச்சு கூறியது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 18 முதியோர் வசதி இடங்களில் 42 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

