முதியோர் பராமரிப்பு விடுதிகளுக்குச் செல்ல இன்று முதல் ஒரு மாத காலம் அனைவருக்கும் தடை விதிக்கப்படுகிறது.
அத்தகைய விடுதிகளில் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதற்கு மேலும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தடை நடப்புக்கு வருவதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
நோயுற்ற முதியோர் தங்கி பராமரிப்பு சிகிச்சை பெறுகின்ற விடுதிகளில் இருப்போர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரிடையே கொவிட்-19 தொற்று அண்மையில் அதிகரித்து இருக்கிறது. அதனையடுத்து இந்தத் தடை நடப்புக்கு வருகிறது.
இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் முதியவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஊக்கமூட்டவும் அத்தகைய விடுதிகளில் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி செயல்திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வரவும் அக்டோபர் 11ஆம் தேதி வரைப்பட்ட இந்தத் தடை உதவும் என்று அமைச்சு தெரிவித்தது.
முதியோர் பராமரிப்பு விடுதிகளின் ஊழியர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பரிசோதனை பலப்படுத்தப்படும்.
விரைவுப் பரிசோதனை அடிக்கடி நடத்தப்படும். தடமறியும் சோதனைகளுக்கு இவை உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் கடந்த இரண்டு வாரங்களில் 18 முதியோர் பராமரிப்பு விடுதிகளில் அல்லது அந்தச் சேவை வழங்குவோரில் 42 பேருக்குத் தொற்று ஏற்பட்டு உள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது. வரும் வாரங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் எளிதில் பாதிக்கக்கூடிய முதியோரைப் பாதுகாக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சு, வரும் வாரங்களில் சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து அதற்கேற்ப இந்தத் தடை மறுபரிசீலனை செய்யப்படும் என்றது.
இதனிடையே, 60 மற்றும் அதற்கு அதிக வயதுள்ள முதியவர்கள், முதியோர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் நாளை முதல் கொவிட்-19 மூன்றாவது தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்படும் என்று கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூரில் அண்மைய வாரங்களில் அன்றாட தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் புதிதாக கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டக்கூடும் என்று அந்தச் சிறப்புப் பணிக்குழு எச்சரித்து இருக்கிறது.
அன்றாட தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 288 என்ற அளவில் கூடி இருக்கிறது. இது இரண்டு வாரங்களுக்கு முன் 76 ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த அவசியமற்ற சமூகக் கலந்துறவாடல்களை அடுத்த சில வாரங்களுக்குத் தவிர்த்துக்கொள்ளும்படி மக்களுக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதியோர் பராமரிப்பு விடுதிகளில் தங்கி இருக்கும் தங்கள் உறவினர் யாராவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால் அவர்களை உடனடியாக ஊசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் படி மக்களை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்களை கொவிட்-19 கிருமி தொற்றினால் அதனால் அவர் களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள், கிடைக்கும்போது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியதும் முக்கியமானதாகும்.
இதன் மூலம் அவர்களின் உடலில் நோய் தடுப்பாற்றல் தொடர்ந்து அதிகமாக இருந்து வரும்.
கடுமையான கிருமி பாதிப்புகளில் இருந்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொற்று பரவலைத் தடுக்க, முதியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக அக்டோபர் 11 வரை வருகை நிறுத்திவைப்பு

