கொவிட்-19 கிருமித்தொற்றை ஒடுக்க தடுப்பூசியே வழி என்பதால் நேற்று தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
மாநிலம் முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் தடுப்பூசி போடப்பட்டது. தேர்தலில் வாக்களிக்க வருவதைப்போல மக்கள் பல முகாம்களிலும் காலை முதலே திரண்டதாக ஊடகத் தகவல்கள் கூறின.
அமைச்சர்கள் முதல் அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள், பாமரர்கள் வரை சமூகத்தில் 18 வயதிற்கும் மேற்பட்ட பல தரப்பினரும் முகாம்களுக்கு மிகவும் ஆர்வத்துடன் வந்தனர்.
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 2 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போடும் நோக்கத்தில் பல்வேறு ஏற்பாடுகளும் கடந்த ஒருவார காலமாக வெகுசிறப்பான முறையில் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறின.
விழிப்புணர்வு முயற்சிகள், ஒலிபெருக்கி அறிவிப்புகள், பாடல்கள், கைபேசி குறுஞ்செய்திகள், வாகன விளம்பரங்கள், சுவரொட்டிகள், கையேடுகள், துண்டு வெளியீடுகள் போன்ற பல வழிகளிலும் மக்களிடம் தடுப்பூசி முக்கியத்துவம் எடுத்துக் கூறப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதிகாரிகள் வீட்டுக்கு வீடு சென்றும் மக்களை உற்சாகப்படுத்தினர். மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தொண்டூழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தடுப்பூசி இயக்கத்தில் கலந்துகொண்டு பல வழிகளிலும் உதவினர். இவை ஒருபுறம் இருக்க, நடமாடும் தடுப்பூசி முகாம்களும் செயல்பட்டன.
சென்னையில் ஒரே நாளில் 3.25 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி போடும் நோக்கத்துடன் 1,600க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டன. 600 மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 7,000 பேர் சென்னையில் மட்டும் தடுப்பூசி இயக்கத்தில் உதவினர். தேவைக்கு அதிகமாக தடுப்பூசி இருந்ததால் ஒருவர்கூட திருப்பி அனுப்பப்படவில்லை என்று பல்வேறு முகாம்களையும் மேற்பார்வையிட்ட உயர்நிலை அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, தடுப்பூசி இயக்கம் பற்றி கருத்துக் கூறிய சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சனிக்கிழமைவரை 36.2 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார். தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காலையில் இருந்தே மக்கள் பேரார்வம் காட்டுவதால் 20 மில்லியன் என்ற இலக்கை எட்டிவிட முடியும் என்று சென்னையில் ஒரு முகாமை நேற்று பார்வையிட்டபோது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,639 பேருக்குத் தொற்று ஏற்பட்ட தாகவும் 27 பேர் மாண்டுவிட்டதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது. மொத்த மரண எண்ணிக்கை 35,146 ஆக உள்ளது.

