மலேசியாவின் புதிய அரசுடன் ஆக்கபூர்வ உறவு வைத்திருக்க சிங்கப்பூர் கடப்பாடு

மலேசியாவின் புதிய அரசுடன் ஆக்கபூர்வ உறவு வைத்திருக்க சிங்கப்பூர் கடப்பாடு

1 mins read
827691fb-e9ed-40b3-83e3-51da092eeb5a
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவின் புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வ உறவு வைத்திருக்க சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் நீண்டகால அடிப்படையில் பலன் தரும் வகையில் மலேசியத் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுடன் ஒத்துழைப்பதை சிங்கப்பூர் தொடரும் என்று நாடாளுமன்றத்தில் அவர் இன்று தெரிவித்தார்.

மலேசியாவில் தற்போதைய அரசியல் சூழல், சிங்கப்பூர்-மலேசியா இருதரப்புப் பங்காளித்துவத்தின் நிலை ஆகியவை தொடர்பாக செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர், கெபுன் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹென்ரி குவெக் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகியதை அடுத்து, கடந்த மாதம் 21ஆம் தேதியன்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அப்பதவியை ஏற்றார்.

மலேசியாவை யார் ஆட்சி செய்தாலும் அவருடன் இணைந்து செயல்படுவதே சிங்கப்பூரின் நிலைப்பாடு என்றார் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

"இதற்கு முன்பு இருந்த மலேசிய அரசாங்கங்களுடனும் தலைவர்களுடனும் நாம் நல்லுறவு கொண்டிருந்தோம். பல துறைகளில் நாம் அவர்களுடன் நன்கு ஒத்துழைத்து வந்துள்ளோம்," என்றார் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

மலேசியாவின் பிரதமராக திரு இஸ்மாயில் பதவி ஏற்ற மறுநாள், பிரதமர் லீ சியன் லூங் அவருடன் தொடர்புகொண்டு பேசியதை அமைச்சர் சுட்டினார்.

மலேசிய அமைச்சர்களுடன் சிங்கப்பூர் அமைச்சர்கள் நல்லுறவை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்