புதிய மசோதா முன்மொழிவு

புதிய மசோதா முன்மொழிவு

3 mins read

வெளிநாடுகள் சிங்கப்பூர் அரசியலில் தலையிடுவதைத் தடுக்க நடவடிக்கை

சிங்­கப்­பூர் அர­சி­ய­லில் வெளி­நாட்டுத் தலை­யீட்­டைத் தடுக்­கும் நோக்­கில் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வெளி­நாட்­டுத் தலை­யீடு (எதிர்­ந­டவ­டிக்­கை­கள்) மசோதா தாக்­கல் செய்­யப்­பட்­டது.

பய­னா­ளர்­கள் குறித்த தக­வல்­களை அளிக்­கு­மா­றும் இணை­யத் தக­வல்­களை நீக்­கு­மா­றும் பய­னா­ளர்­க­ளின் கணக்­கு­களை முடக்­கு­மா­றும் இணைய, சமூக ஊடக சேவை வழங்­கு­நர்­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பல அதி­கா­ரங்­களை அம்­ம­சோதா அர­சாங்­கத்­திற்கு வழங்­கும்.

பகை­மை­யு­ணர்­வைத் தூண்­டும் பிர­சா­ரங்­கள் மூல­மா­க­வும் உள்­ளூ­ரில் மாற்­றாள்­க­ளைக் கொண்­டும் உள்­நாட்டு அர­சி­ய­லில் வெளி­நாட்டுச் சக்­தி­கள் தலை­யி­டு­வ­தைத் தடுக்­கும், கண்­ட­றி­யும், தகர்க்­கும் சிங்­கப்­பூ­ரின் ஆற்­றலை அந்த மசோதா வலுப்­ப­டுத்­தும் என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் அர­சி­யல் செயல்­பாடு­க­ளு­டன் நேர­டித் தொடர்­பு­ உடை­ய­வர்­கள் அர­சி­யல் சார்ந்த முக்­கிய நபர்­க­ளாக (பிஎஸ்பி) வகைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

வெளி­நாட்­டுத் தலை­யீ­டு­களும் பகை­மை­யைத் தூண்­டும் தக­வல் பிர­சா­ரங்­களும் சிங்­கப்­பூ­ரின் அர­சி­யல் இறை­யாண்­மைக்­கும் தேசிய பாது­காப்­பிற்­கும் பெரும் அச்­சு­றுத்­தல்­க­ளாக விளங்கி வரு­கின்­றன என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

"அர­சி­யல் விவ­கா­ரங்­களில் சிங்­கப்­பூ­ரர்­க­ளைத் தவ­றாக வழி­நடத்­தும், இனம், சம­யம் சார்ந்து கருத்து பேதங்­க­ளை­யும் வேற்­று­மை­யை­யும் ஏற்­ப­டுத்தும் அல்­லது பொது அமைப்­பு­கள் மீதான நம்­பிக்­கை­யைக் கீழ­றுக்­கச் செய்­யும் முயற்­சி­களில் அந்நிய சக்­தி­கள் ஈடு­ப­ட­லாம்," என்று அமைச்சு கூறியது.

வெளி­நாட்­டுத் தலை­யீடுகள் தொடர்­பான நட­வடிக்­கை­க­ளைப் பெற­வும் ஊறு விளை­விக்­கும் இணை­யத் தொடர்பு­க­ளைத் தடுக்­க­வும் விரைந்து செயல்­பட்டு அத்­த­கைய தவ­றான தக­வல் பர­வலைத் தடுக்­க­வும் அல்­லது கட்­டுப்­ப­டுத்­த­வும் அர­சாங்­கத்­திற்­குப் புதிய மசோதா அதி­கா­ர­ம் அ­ளிக்­கும். மேலும், அந்­நிய சக்­தி­கள் செல்­வாக்கு செலுத்த வாய்ப்­புள்­ள­தாக தனி­நபர்­களை அல்­லது நிறு­வ­னங்­களை வகைப்­ப­டுத்­த­வும் அவ்­வப்­போது உரிய தக­வல்­களை அளிக்­கும்­படி கட்­டா­யப்­ப­டுத்­த­வும் வெளி­நாட்­டுத் தலை­யீட்டு நட­வடிக்­கை­கள் தொடர்­பான தகவல்­களைப் பெற­வும் அதிகாரிகளால் முடியும்.

வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு சிங்கப்பூர் விதிவிலக்கு அல்ல என்று அமைச்சு குறிப்பிட்டது.

1980களில் சிங்­கப்­பூர்க்­கான அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தின் முதன்­மைச் செய­லா­ளர் ஹேங்க் ஹென்­ரிக்­சன் உள்­ளூர் வழக்­க­றி­ஞர்­கள் சிலரை எதிர்க்­கட்­சி­களில் இணை­யும்­ப­டி­யும் 1988 பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டும்­ப­டி­யும் தூண்­டி­ய­தை­யும் அதற்­காக அவர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­பட்­ட­தை­யும் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது.

2018, 2019ஆம் ஆண்டுகளில் இன்­னொரு நாட்­டு­டன் சிங்­கப்­பூர் இரு­த­ரப்­புப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­ட­போது, பெய­ரில்­லாச் சமூக ஊட­கக் கணக்­கு­கள்வழி சிங்­கப்­பூ­ருக்கு எதி­ராக இணை­யத்­தில் அதி­க­ள­வில் கருத்து பதி­வி­டப்­பட்­ட­தை­யும் அது சுட்­டி­யது.

வெளிநாட்டுத் தொடர்பு குறித்து கட்டாயம் தெரிவிக்க வேண்டும்

அர­சி­யல் சார்ந்த பத­வி­களில் இருப்­போ­ரும் அர­சி­யல் கட்­சி­களும் வெளி­நா­டு­க­ளின் செல்­வாக்­கில் சிக்­கி­வி­டா­மல் தடுக்க புதிய மசோ­தா­வின்­கீழ் கடும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட வேண்­டி­ இருக்­கும்.

வெளி­நாட்­டுக் கடப்­பி­தழ், வெளி­நாட்­டில் வேலை செய்­யும் உரிமை அல்­லது அங்கு நிரந்­த­ர­மா­கத் தங்­கி­யி­ருக்­கும் உரிமை போன்­ற­வற்­றைப் பெற்­றி­ருந்­தால் அது­கு­றித்து அர­சாங்­கத்­தி­டம் தக­வல் தெரி­விப்­பது கட்­டா­ய­மா­கும்.

அமைச்­சர்­கள், அர­சி­யல் சார்ந்த பதவி வகிப்­போர், நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­கள், தேர்­தல் வேட்­பா­ளர்­கள் மற்­றும் அவர்­களின் முக­வர்­கள் உள்­ளிட்­டோர் வெளி­நாட்­டுத் தலை­யீடு (எதிர்­நட­வ­டிக்­கை­கள்) மசோ­தா­வின்­கீழ் அர­சி­யல் சார்ந்த முக்­கிய நபர்­களாக வரை­ய­றுக்­கப்­ப­டு­வர்.

அவர்­க­ளு­டன், உள்­துறை அமைச்­சால் நிய­மிக்­கப்­படும் தகுதி­யான அதி­காரி, உள்­நாட்­டில் அல்­லது வெளி­நாட்­டில் வசிக்­கும் எந்த ஒரு சிங்­கப்­பூ­ர­ரை­யும், சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் எவர் ஒரு­வ­ரை­யும், அல்­லது உள்­ளூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட எந்த ஒரு நிறு­வ­னத்­தை­யும் அர­சி­யல் சார்ந்த முக்­கிய நப­ரா­கக் குறிப்­பிட முடி­யும்.

ஆயி­னும், அப்­ப­டிக் குறிப்­பி­டப்­படும் நபர்­கள், அர­சி­யல் சார்ந்த முக்­கிய நபர்­க­ளாக வரை­ய­றுக்­கப்­ப­டு­வோ­ரைக் காட்­டி­லும் கடுமை குறைந்த கட்­டுப்­பா­டு­களுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

எடுத்­துக்­காட்­டாக, அர­சி­யல் சார்ந்த முக்­கிய நபர்­க­ளா­கக் குறிப்­பி­டப்­ப­டு­வோர் உள்­ளூ­ரில் அல்­லது வெளி­நாட்­டில் இருந்து ஒரே தட­வை­யாக 10,000 வெள்ளி அல்­லது அதற்­கு­மேல் நன்­கொடை பெற்­றா­லும் ஒரு­வ­ரி­ட­மி­ருந்தே குறித்த காலத்­தில் $10,000 அல்­லது அதற்­கு­மேல் நன்­கொடை பெற்­றா­லும் தெரி­விக்க வேண்­டும். அவர்­க­ளின் அர­சி­யல் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் வெளி­நாட்­ட­வர்­கள் பங்­கேற்­கக்­கூ­டாது.

அர­சி­யல் சார்ந்த முக்­கிய நபர்­க­ளா­கக் குறிப்­பி­டப்­ப­டு­வோர், அவ்வாறு குறிப்பிடப்படுவதை எதிர்த்து உள்துறை அமைச்சிடம் மேல்முறையீடு செய்யலாம்.