நான்கு தடுப்பூசி நிலையங்கள் இம்மாத இறுதியில் மூடப்படும்

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டு வரும் 37 தடுப்பூசி நிலையங்களில் நான்கு நிலையங்கள் இம்மாத இறுதியில் மூடப்படும். சிங்கப்பூரில் தடுப்பூசி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பல தடுப்பூசி நிலையங்கள் மூடப்படலாம் என்றார் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.

இருப்பினும், தடுப்பூசியை வழங்கும் பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களின் (பிஎச்பிசி) எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றார் அவர். தற்போது தடுப்பூசியை வழங்கும் மருந்தகங்களின் எண்ணிக்கை 79. இது அக்டோபர் இறுதிக்குள் கிட்டத்தட்ட நூறாக அதிகரிக்கப்படும் என்றார் டாக்டர் ஜனில்.

தடுப்பூசி நிலையம் அல்லது ‘பிஎச்பிசி’க்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களுக்காக அரசாங்கத்தின் நடமாடும் மற்றும் இல்லத் தடுப்பூசிக் குழுக்கள் இருப்பதையும் டாக்டர் ஜனில் சுட்டினார்.

சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரம், தடுப்பூசி மற்றும் வர்த்தகங்கள் திறப்பு தொடர்பிலான சிங்கப்பூரின் திட்டங்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் 19 உறுப்பினர்கள் கேள்வி கேட்டதை அடுத்து டாக்டர் ஜனில் இவ்வாறு பதிலளித்தார்.

தற்போது, சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் தடுப்பூசி விகிதம் மட்டுமே, அடுத்தகட்ட தளர்வைத் தீர்மானம் செய்யும் அளவுகோலாக இராது என்றார் டாக்டர் ஜனில்.

“தடுப்பூசி விகிதங்களைத் தவிர, கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, தொற்றின் போக்கு, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட்ட நமது சமூகச் செயல்பாடுகள், பரிசோதனை நிலவரம் ஆகியவற்றையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்,” என்றார் அவர்.

இந்த அம்சங்கள் அனைத்தையும் கருதியபின், தற்போது அதிகரித்துவரும் கொவிட்-19 சம்பவங்களுக்கிடையே பொருளியல் நடவடிக்கைகளை மேலும் அனுமதிக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்திவைக்க முடிவெடுத்துள்ளது என்றார் டாக்டர் ஜனில்.

திங்கட்கிழமையன்று 600ஐத் தாண்டிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் 1,000ஐத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

பிள்ளைகளைப் பாதுகாப்பதில் கொவிட்-19 தடுப்பூசிகளின் செயல்திறன் எத்தகையது என்றும் கேள்விகள் எழுந்தன. இதுவரை சிங்கப்பூரில் எந்த ஒரு குழந்தையும் கொவிட்-19 காரணமாக செயற்கை உயிர்வாயு தேவைப்படும் நிலைக்கோ தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலைக்கோ தள்ளப்படும் அளவுக்குக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகவில்லை என்று டாக்டர் ஜனில் விளக்கினார்.

இருப்பினும், சமூகத்தில் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவனிக்க வேண்டியது என்றார் அவர். அச்சிறார்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டால் தகுந்த பராமரிப்பு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்றார் அவர்.  

மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் வினவினார். அது குறைவான எண்ணிக்கையே என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்த டாக்டர் ஜனில், அரசாங்கம் அந்த எண்ணிக்கையையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!