வெளிநாடுகளுக்குத் தன் கதவைத் திறந்திருக்கவும் சிங்கப்பூரர்களுக்குப் பலன்கள் தரவும் சிங்கப்பூர் தொடர்ந்து திறந்த பொருளியலின் குறைபாடுகளை அறிந்து செயல்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். உலகமயமாகும்போது ஒரு மையமாகத் திகழும் பொருளியலை, சிங்கப்பூர் கொண்டிருந்து அதன் மூலம் நாட்டுக்குப் பலன்கள் கிட்டினாலும், அதில் பின்விளைவுகளும் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிலர் தங்களின் வேலைகளை இழக்கக்கூடும் என்று உதாரணம் காட்டினார்.
இருப்பினும், தேவையற்றதாக அடையாளங்காணப்பட்ட வேலைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு தன் முன்னேற்றத்தைத் தடுப்பதற்குப் பதிலாக, சிங்கப்பூர் கடுமையாகச் செயல்பட்டு அனைத்து ஊழியருக்கும் பாதுகாப்பு அளிப்பதும் வேலை இழந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதுமே சரியான அணுகுமுறை என்றார் திரு வோங்.
இந்த அணுகுமுறையை மக்கள் செயல் கட்சியும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 60,000 'பிஎம்இடி' எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆட்குறைப்பின் மூலம் தங்களின் வேலையை இழந்துள்ளனர். இருப்பினும், சிங்கப்பூர்வாசிகளுக்கு இதே 'பிஎம்இடி' வேலைகள் கிடைத்திருந்த எண்ணிக்கை, ஏறத்தாழ 300,000 அதிகம் என்றார் அவர்.
வெளிநாடுகளுக்குத் திறந்த ஒரு நாடாக இயங்குவதால் ஏற்படும் பாதிப்புகளை சிங்கப்பூர் எவ்வாறு சமாளிக்கிறது என்று திரு வோங் பட்டியலிட்டார்.
முதலாவதாக, வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களின் வருகையைச் சமாளிக்கவும் அவர்களின் தரத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து அதன் மனிதவளக் கொள்கைகள், விதிமுறைகள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறது.
இரண்டாவதாக, நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகளை சிங்கப்பூர் கடைப்பிடிப்பதுடன் வேலையிடப் பாகுபாட்டுக்கு எதிராகக் கடுமையான ஒரு நிலைப்பாட்டை அது கொண்டுள்ளது.
இறுதி அம்சமாக, வேலை இழந்தவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு சிங்கப்பூர் உதவி நல்கி வருகிறது என்றார் அமைச்சர்.
இதற்காகவே, 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' என்ற சிங்கப்பூரின் தேசிய அளவிலான வாழ்நாள் கற்றல் இயக்கத்தில் பெருமளவு முதலீடுகள் செய்யப்பட்டு சிங்கப்பூரர்கள் வேலையில் நியமிக்கப்படும் தகுதியைக் கொண்டிருக்க உதவி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் குறிப்பாக பணியிடைக்கால 'பிஎம்இடி'கள் மீது கவனம் செலுத்தி, அவர்களுக்குத் தேவையான திறன் பயிற்சியை வழங்கி புதிய வேலைகள் தேடிக்கொள்ள உதவுவதாக திரு வோங் கூறினார்.
இக்குறிப்பிட்ட ஊழியர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் துரிதப்படுத்த, கொவிட்-19 சூழல் மேலும் தூண்டுதலாக அமைந்துவிட்டது. உற்பத்தித் திறன், ஊதியம் ஆகியவற்றை அனைத்துத் துறைகளிலும் உயர்த்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக திரு வோங் தெரிவித்தார்.
இது தொழில்துறை உருமாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆதரவு ஆகிய அம்சங்கள் மூலம் சாத்தியமாகும். பணியிடைக்கால ஊழியர்களுக்கும் முதிர்ச்சியடைந்த ஊழியர்களுக்கும் குறிப்பாக இம்முயற்சிகள் கை கொடுத்து புதிய துறைகளில் அவர்கள் காலூன்ற உதவும் என்று கூறப்பட்டது.
நிலையற்ற தன்மை, இடையூறுகள் இரண்டும் உள்ள காலகட்டத்திற்குள் சிங்கப்பூர் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் இங்குள்ள ஊழியர்களுக்குக் கூடுதல் உதவி சென்றடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு அளவுகளில் நிரந்தர மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்று அவர் விளக்கினார்.
இந்த மாற்றம் தொடர்பான விவரங்களைத் தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர் செய்யவுள்ள அந்த மாற்றங்கள் நிதி நிலைத்தன்மையுடையவையாக இருக்கும் என்பது உறுதிசெய்யப்படும் என்றார்.
"உங்களைத் தனியாக விட்டுவிட மாட்டோம், குறிப்பாக வேலை இழந்தவர்கள். அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நான் அளிக்கும் வாக்குறுதி இது.
"உங்களின் ஆற்றல்களிலும் திறன்களிலும் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம்; போட்டித்தன்மை மிக்கவராக நீங்கள் இருக்க உதவுவோம்; உங்களின் வாழ்க்கைத்தொழில்கள் காலம் நீடிக்கும்வரை இப்பயணத்தில் உங்களுடன் சேர்ந்தே நடைபோடுவோம்," என்றார் அமைச்சர் வோங்.

