கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோருக்கு கிருமி தொற்றினால், அவர்கள் வீட்டில் இருந்தவாறே குணமடையும் நடைமுறை இன்றுமுதல் தொடங்குகிறது என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இது தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் பொருந்தாது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, 12 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட, மிதமான தொற்று அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே அல்லாதவர்களுக்கு இந்நடைமுறை பொருந்தும். அத்துடன் அவர்களுக்கு வேறு கடுமையான நோய் பாதிப்பும் இருக்கக்கூடாது என்று அமைச்சு குறிப்பிட்டது.
மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவரது வீட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களும் இருக்கக்கூடாது. கர்ப்பிணிகள், வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற எளிதில் பாதிப்படையக்கூடியவர்களும் குடும்ப உறுப்பினராக இருக்கக்கூடாது.
மருத்துவப் பராமரிப்பு அதிகம் தேவைப்படுவோருக்கு மருத்துவமனையில் இடம் ஒதுக்க இப்புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியான உடனே அனைத்து நிபந்தனைகளுக்கும் அவர் உட்பட்டு இருந்தால், இல்லத்தில் இருந்தவாறு குணமடையும் நடைமுறையை அவர் தொடங்கிவிடலாம்.
இதற்காக கழிவறையுடன் இணைந்த ஓர் அறையை ஒதுக்க வேண்டியிருக்கும் என்றது அமைச்சு. மருத்துவமனைக்கோ சமூகப் பராமரிப்பு வளாகத்திற்கோ செல்லத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது.
இல்லத்தில் இருந்தவாறு குணமடைவதற்கென அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 நோயாளிகள், தங்களின் முதல் நாளன்று தொலைமருத்துவ வழங்குநர் ஒருவரால் மதிப்பிடப்படுவர். மருத்துவ ரீதியாக அவர்கள் நலமாக இருப்பதை வழங்குநர் உறுதிசெய்வார்.
இக்குறிப்பிட்ட நபர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும். வீட்டில் ஒதுக்கப்பட்ட அறையில் அவர்கள் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய, அவர்களுடன் மின்னியல் கண்காணிப்புச் சாதனம் ஒன்றும் இணைக்கப்படலாம்.
தனிமை உத்தரவுக்கான காலகட்டத்தை இம்மாதம் 11ஆம் தேதிமுதல், 14 நாட்களிலிருந்து 10 நாட்களாக குறைக்கவிருப்பதாக அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நாளிலிருந்து பத்தாவது நாளன்று தொற்று இல்லை என்று பரிசோதனை மூலம் உறுதிசெய்தால் தனிமை உத்தரவு முடிந்ததாகப் பொருள்படும்.
தனிமை உத்தரவை இம்மாதம் 11ஆம் தேதிக்கு முன்னதாக பெற்றவர்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைத் தனிமை உத்தரவின்கீழ் நிறைவு செய்திருக்க வேண்டும்; 'பிசிஆர்' பரிசோதனையில் தங்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பதை உறுதிசெய்யவேண்டும். இந்நிலையில், அவர்களின் தனிமை உத்தரவு படிப்படியாக ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
அதையடுத்து, கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பில் இருந்த 11வது நாள் தொடங்கி 14வது நாள் வரை அவர்கள் தொடர்ந்து ஆண்டிஜன் விரைவு பரிசோதனைகளைச் சுயமாகச் செய்துகொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டது.

