கொவிட்-19 பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகளாலும் பல துறைகளில் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டது. ஜூன் மாதத்தில் 92,100 காலிப் பணியிடங்கள் இருந்ததாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த ஜூன் மாதத்தில் வேலையின்றி இருந்த ஒவ்வொரு 100 பேருக்கும் 163 வேலைவாய்ப்புகள் இருந்தன. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு கடந்த ஜூன் மாதத்தில் முதன்முறையாக வேலையில்லாதோர் விகிதத்தைவிட காலிப் பணியிடங்களின் விகிதம் அதிகமாக இருந்தது.
"தற்போது நடப்பில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள், கட்டுமானத்துறையிலும் உற்பத்தித்துறையிலும் ஊழியர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன. நிதி மற்றும் காப்புறுதிச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள், தகவல் மற்றும் தொடர்புத் துறை, ஆகியவற்றிலும் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது," என்று மனிதவள அமைச்சு கூறியது.
இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வந்ததாக அமைச்சு தெரிவித்தது. ஒட்டுமொத்தத்தில், பருவத்துக்கு ஏற்ப சரிக்கட்டப்படும் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து, கடந்த ஜூன் மாதத்தில் 2.7 விழுக்காடாகப் பதிவானது.
பருவத்துக்கு ஏற்ப சரிக்கட்டப்படும் நீண்டகால வேலையின்மை விகிதமும் கடந்த ஜூன் மாதத்தில் 0.9 விழுக்காடாகக் குறைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இவ்வாண்டு மார்ச் மாதத்திலும் அது 1.1 விழுக்காடாக இருந்தது.
"புதிய வேலைச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு புதிய வாய்ப்புகளை வர்த்தகங்களும் ஊழியர்களும் பயன்படுத்திக்கொள்வதை தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் எதிரொளிக்கிறது," என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்க முத்தரப்புப் பங்காளிகளுடன் அரசாங்கம் இணைந்து செயல்படும் என்றார் அவர்.

