புதுவிதக் கொண்டாட்டம், புதுவகை முயற்சிகள்

பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியவாறு பெரியளவிலான தீபாவளிச் சந்தை, மக்களுக்கான பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சிகள் போன்றவை இல்லாமல் கடந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் நடந்து முடிந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்காக இணையம் வழி உற்சாகமூட்டும் புதுவித முயற்சிகளில் இறங்கியுள்ளது லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம்.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவரும் வண்ணம் இணைய நிகழ்ச்சிகளும் நேரடிப் போட்டிகளும் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5ஆம் தேதி வரை இடம் பெறவுள்ளன.
தீபாவளிக் குதூகலத்தைக் தொடங்கிவைக்கும் ஒளியூட்டு நிகழ்ச்சி மெய்நிகராக இம்மாதம் 25ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. தொலைக்காட்சியில் ஒளியேறும் இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.

இந்த ஆண்டு தீபாவளி ஒளியூட்டின் முக்கிய அலங்காரமாக கோவில் கோபுரம் இடம்பெறுகிறது. மகிழ்ச்சி பொங்கும் கொண்டாட்ட உணர்வை வரவேற்பதோடு, நமது கவலைகளை விட்டுவிட்டு ஒருமித்த நல்லெண்ணத்தோடு செயல்படுவதை இந்த அலங்காரம் சித்திரிக்கிறது.
‘டிக் டாக்’ போட்டி, புகைப்படப் போட்டி, ‘Smule’ என்ற கைபேசிச் செயலி வழி நடத்தப்படும் தீபாவளி ‘கராவோக்கே’ போட்டி, இந்தியாவின் ஈரோடு மகேஷ் தலைமையில் நடக்கும் இணைய ‘பார்ட்டி’ மன்றம் என மாற்றங்களை வரவேற்று புத்தாக்கத்தை முன்னிறுத்தி கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு லிஷா ஏற்பாடு செய்திருக்கிறது.

இணையம் வழி மக்களை உற்சாகப்படுத்துவதோடு நின்றுவிடாமல், குடும்பத்துடன் விளையாட ‘கஜானா’ புதையல் வேட்டை, கின்னஸ் உலகச் சாதனை படைத்த ரங்கோலி கலைஞர் திருமதி விஜயா மோகன் சமூகத்தினருடன் சேர்ந்து உருவாக்கிய காகிதப் பூ ரங்கோலியின் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

“லிஷா 21 ஆண்டுகளாக தீபாவளி ஒளியூட்டையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆதரவோடு நடத்தி வருகிறது. தீபாவளிக் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வந்தபோதும் சென்ற ஆண்டு முதல்முறையாக இணையம் வழி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
“பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை மக்கள் நேரடியாக வந்து பார்க்க முடியாமல் போனாலும் இணையம் வழி மிக எளிமையாக எங்களால் இணைய முடிகிறது. முன்பெல்லாம் 5000 பேர் நேரடியாக வந்து கண்டுகளிக்கும் ஒளியூட்டு நிகழ்ச்சியை இப்போது பல்லாயிரக்கணக்கானோர் காண முடிகிறது. வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்களும் பார்க்க முடிகிறது. கொவிட்-19 சூழலால் தீபாவளிக் கொண்டாட்டங்களை மிக வித்தியாசமான கண்ணோட்டத்தில் காணவும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும் முடிகிறது.

“இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் இளையர்களின் ஈடுபாடும் பிற இனத்தவரின் பங்கேற்பும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் லிஷாவின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான திரு ராஜ்குமார் சந்திரா.

லிஷாவுடன் கைகோத்து இந்திய மரபுடைமை நிலையமும் வசந்தம் ஒளிவழியும் மக்களை உற்சாகப்படுத்த பல்வகை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மக்களைக் குதூகலப்படுத்தினால் மட்டும் போதாது, அவர்களுக்கு ஆதரவும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், தீபாவளியை முன்னிட்டு கிட்டத்தட்ட 2000 வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கவுள்ளது.
மேலும், லிட்டில் இந்தியாவில் புதைந்து கிடக்கும் பழைய நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவர, தனிமையில் வாழும் மூத்தோரை லிட்டில் இந்தியா சுற்றுலாவுக்கு சிண்டா அழைத்து வரும்.
அமைச்சர்கள் டாக்டர் டான் சீ லெங், குமாரி இந்திராணி ராஜா, திரு ஆல்வின் டான் ஆகியோருடன் மேயர் டெனிஸ் புவா, லிஷா தலைவர் திரு சங்கர நாராயணன் ஆகியோரும் ஒரு பெரிய மயில் வடிவிலான மிதவையில் வலம் வருவது ஒளியூட்டு நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளியூட்டு விழாவிற்குப்பின் இந்த மிதவைகள் சிராங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, சையது ஆல்வி ரோடு ஆகிய இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அவற்றின் அருகே அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும்.
பல்லினச் சமுதாயத்திற்கு வலு சேர்க்கவேண்டும் என்பது லிஷாவின் தீபாவளிக் கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் கொண்டாட்டங்களில் பிற இனத்தவர் கலந்துகொள்ள பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளின் வழி அவர்கள் இந்தியக் கலாசாரம் பற்றிய புரிதலை அதிகப்படுத்திக்கொள்வர் என்று நம்புகிறது லிஷா.

தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றிய மேல்விவரங்களுக்கு இந்த இணையப்பக்கத்தை நாடலாம்: https://www.deepavalisg.com/eventlist

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!