கொவிட்-19 அன்றாடப் பாதிப்பு விரைவில் 1,000ஐ எட்டக்கூடும்: அமைச்சர்

கொவிட்-19 அன்றாடப் பாதிப்பு விரைவில் 1,000ஐ எட்டக்கூடும்: அமைச்சர்

1 mins read
8ddec14a-e312-4ac0-9d9c-23f1c40fd577
விவோசிட்டி கடைத்தொகுதிக்குள் நுழைய வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) பிற்பகல் 1 மணிக்கு வரிசையில் நிற்கும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 அன்றாடப் பாதிப்பு விரைவில் ஆயிரத்தை எட்டக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் இருமடங்கு அதிகரித்து வருவதை அவர் சுட்டினார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்பாராத ஒன்றல்ல என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சர்நிலை பணிக்குழு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் திரு ஓங் தெரிவித்தார்.

"கொவிட்-19 சூழலை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நாடுகள் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் பெரிய கிருமிப் பரவல் அலையை எதிர்நோக்கியாக வேண்டும்," என்றார் அவர்.

நிலைமை சீரடைவதற்கு முன்பு வேறு வழியின்றி பயணம் செய்ய வேண்டிய பாதையாக சிங்கப்பூர் எதிர்நோக்கும் சூழ்நிலையை அமைச்சர் ஓங் வர்ணித்தார்.

நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 910 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 803 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 103 பேர் பாதிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த நால்வருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.