தீவிர பராமரிப்பு சிகிச்சை தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாகக் கூடும் சாத்தியம் இருக்கிறது என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
ஆகையால், மக்கள் இதைப் பொறுத்தவரை மெத்தனமாக இருக்கக் கூடாது. தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்றோ நாட்டின் தீவிர கண்காணிப்பு ஆற்றல் வளத்திற்கு ஒருபோதும் நெருக்கடி ஏற்படாது என்றோ மக்கள் கருதிவிடக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி இயக்கம் செம்மையாக இடம்பெற்று வருகிறது. இப்போது தீவிர சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14ஆக இருக்கிறது. ஆகையால் இதைப் பற்றி கவலையடைய வேண்டாம் என்று சிலர் கூறியிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இதன் தொடர்பில் சிலவற்றை விளக்குவது பொருத்தமானதாக இருக்கும் என்றார்.
தடுப்பூசி அருமையான பாதுகாப்பை வழங்குகிறது. இருந்தாலும்கூட கடுமையான பாதிப்புகளை அது அறவே தடுத்துவிடும் என்று கூறிவிட முடியாது.
கொவிட்-19 தொற்றியவர்களில் ஏறத்தாழ 0.2 விழுக்காட்டினர்- அதாவது 500 பேரில் ஒருவருக்கு தீவிர கண்காணிப்பு தேவைப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பது சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்து உள்ளது.
அப்படிக் கடுமையாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றாலும்கூட தீவிர சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துவிட முடியும் என்பதை திரு வோங் சுட்டிக்காட்டினார்.
நோயுற்ற ஒருவர் இரண்டு வாரங்களுக்கும் மேற்பட்ட காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டுப் பார்த்தால் அந்தப் பிரிவுக்கான தேவை, பிரச்சினையாக ஆகிவிடக்கூடிய ஒரு நிலையை விரைவில் எட்டிவிடும் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு வோங் எச்சரித்தார்.
சிங்கப்பூரில் இப்போது கொவிட்-19 நோயாளிகளுக்காக ஏறத்தாழ 100 தீவிர சிகிச்சைப் படுக்கைகள் இருக்கின்றன. உடனடியாக இந்த எண்ணிக்கையை 300 வரை அதிகரிக்கும் ஆற்றலும் இருக்கிறது.
முதியவர்களில் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களில் அதிகம் பேருக்குத் தொற்று ஏற்பட்டால் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான தேவை தொடர்ந்து குறைவாகவே இருந்து வரும் என்று நாம் ஒருபோதும் கருதக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமான கட்டம் என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் தேவையற்ற சமூக நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

