கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு மருத்துவமனை களின் விபத்து, அவசர பிரிவுகளில் சென்ற ஆகஸ்ட் மாதத்தைவிட சென்ற வாரம் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளில் சிலர் படுக்கைக்காக அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு சிகிச்சை நாடி வந்த கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
அத்தகைய நோயாளிகளுக்கு மேலும் படுக்கைகளை ஏற்படுத்தித் தரவேண்டியநிலை இருந்ததாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு தெரிவித்தது.
அவசரமற்ற அறுவை சிகிச்சை களையும் அவசர சிகிச்சை தேவைப் படாத நோயாளிகளையும் மருத்துவ மனைகள் குறைத்துக்கொண்டு வரும் வேளையில் மருத்துவமனைகளின் ஒட்டு மொத்தப் பயன்பாட்டுக்கு நெருக்கடி மேலும் அதிகமாகி வருகிறது என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் பக்கத்தில் இது பற்றி கருத்து கூறியிருந்தார்.
"இந்தக் காலகட்டத்தில் நம்முடைய மருத்துவமனைகளுக்கும் சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் சுமை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கக் கூடாது. இதுவே சுகாதார அமைச்சு எதிர்நோக்கும் ஆகப்பெரிய சவால். இதற்குத் தீர்வுகாண முடிந்தவரை பாடுபட்டு வருகிறோம்," என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் வயதினர், கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் வீட்டில் இருந்தே குணமடைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

