மலேசியாவில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் உயிரிழந்தனர்.
ஞாயிறு அன்று மட்டும் 376 மரணச்சம்பவங்கள் பதிவானதாக அமைச்சின் கொவிட்-19 இணையத் தளம் தெரிவித்தது. இவர்களில் 75 பேர் இறந்த பிறகு மருத்துவ மனைக்குக் கொண்டு வரப் பட்டவர்கள். கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி பதிவான 413 மரணச் சம்பவங் களுக்குப் பிறகு தொடர்ந்து ஏழாவது நாளாக ஞாயிறு அன்று 300 பேருக்கு மேல் தொற்றால் மடிந்துள்ளனர்.
சிலாங்கூரில் ஆக அதிகமாக 148 பேர் இறந்தனர். இதற்கு அடுத்ததாக ஜோகூரில் 43 பேரும் சாபாவில் 35 பேரும் கிளந்தானில் 32 பேரும் உயிரிழந்தனர்.
இவர்களுடன் சேர்த்து கிருமித் தொற்றுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அங்கு 23,443ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு கொள்ளைநோய் பரவியதிலிருந்து மலேசியா முழுவதும் குறைந்தது 4,422 குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை அல்லது பராமரிப்பாளரை இழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
4,422 குழந்தைகளில் 154 குழந்தைகள் இரு பெற்றோரையும் இழந்துவிட்டதாக மாதர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹாருன் தெரிவித்தார். குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவிகளும் ஆதரவும் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். "உடனடி உதவி நிதி மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா 150 ரிங்கிட் முதல் 1,500 ரிங்கிட் வரை வழங்கி வருகிறோம்," என்று அமைச்சர் ரினா ஹாருன் மேலும் கூறினார்.

